HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



கீதை காட்டும் பாதை

Go down

கீதை காட்டும் பாதை Empty கீதை காட்டும் பாதை

Post by logu August 5th 2011, 20:08

நமக்குள்ளே ஒரு குருக்‌ஷேத்ரம்!

ஒவ்வொரு
மனிதனும் தன் வாழ்க்கையில் அவ்வப்போது தனக்குள்ளே ஒரு
குருக்‌ஷேத்திரத்தைக் காண்கிறான். தர்மம்-அதர்மம், நன்மை-தீமை,
பலம்-பலவீனம், கட்டுப்பாடு-கிளர்ச்சிகள், அறிவு-அறியாமை,
லட்சியம்-அலட்சியம் போன்ற அணிகள் நேரெதிராக நின்று அவனுக்குள்ளே அடிக்கடி
போர் புரிந்த வண்ணம் இருக்கின்றன. அவன் அந்தப் போரில் ஒவ்வொரு ஜதையிலும்
எதை ஜெயிக்க விடுகிறான் என்பதை வைத்தே அவன் அளக்கப்படுகிறான். அதை வைத்தே
அவன் வாழ்க்கையின் தரமும் தீர்மானிக்கப்படுகிறது.

ஆனால் அப்படி
நடக்கும் போரில் எல்லா சமயங்களிலும் சரியாகத் தீர்மானித்து உறுதியாகச்
செயல்படும் தெளிவை மனிதன் பெற்றிருப்பதில்லை. சில சமயங்களில் அவன் தன்னிலை
இழந்து குழப்பத்தால் செயலிழந்து விடுகிறான். என்ன செய்வது என்று தெரியாமல்
திகைத்து நிற்கிறான். சில சமயங்களில் தெரிந்தாலும் அதனைச் செயல்படுத்த
திறனின்றி தவிக்கின்றான். செயல்பட வேண்டிய நேரத்தில் ஸ்தம்பித்துப் போகிற
முட்டாள்தனம் அவனுள் ஏற்பட்டு விடுகிறது. செயலிழந்து நிற்கையில் பிரச்னைகள்
பெரிதாக ஆரம்பிக்கின்றன. எதிர்நோக்கி நிற்கும் பிரச்னைகளின்
பிரம்மாண்டத்தைப் பார்க்கையில் வாழ்க்கையை முடித்துக் கொள்வது நல்லது என்று
கூட சிலர் முடிவு செய்கிறார்கள். சிலர் பேசாமல் சன்னியாசம் வாங்கிக்
கொண்டு விலகிக் கொள்வது உத்தமம் என்று நினைக்கிறார்கள்.


அர்ஜுனன் குருக்‌ஷேத்திர பூமியில் இந்த நிலையில் தான் நிற்கிறான். அப்போது
அவனுக்கு பகவான் கிருஷ்ணன் செய்யும் உபதேசம் தான் பகவத் கீதை. அந்த
உபதேசம் அன்று அர்ஜுனனின் குழப்பத்தைக் களைந்து தெளிவு பெற வைத்து அவனை
உறுதியுடனும் வீரத்துடனும் செயல்பட வைத்தது. அவனை வெற்றி பெறவும் வைத்தது.
பகவத் கீதை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அர்ஜுனனுக்காக சொல்லப்பட்டது
என்றாலும் பிற்கால மனிதர்கள் அனைவருக்காகவும், அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு
இக்கட்டான கட்டத்திலும் பொருந்தும் படியாக தனித்தனியே
சொல்லப்பட்டிருக்கிறது என்று உணரத்தக்க வகையில் எக்காலத்திற்கும்
பொருந்தக்கூடிய பேருண்மைகளை தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் சிறப்பு
பெற்று அமரத்துவம் அடைந்து விட்டது.

முன்பு சொன்னது போல நாம்
அனைவருமே சில சமயங்களில் அர்ஜுனன் நிலைக்கு வந்து விடுகிறோம். வாழ்க்கையில்
பிரச்னைகள் பூதாகரமாக நம் முன் விஸ்வரூபம் எடுத்து நிற்கையில்
தெளிவாகவும், விரைவாகவும், உறுதியாகவும் செயல்பட வேண்டியிருக்கும்
கட்டத்தில் குழப்பம், பயம், துக்கம், செயலின்மை, விரக்தி ஆகியவற்றின்
பிடியில் கட்டுண்டு நிற்க நேர்கிறது. எளிய தேவைகள், எளிமையான வாழ்க்கை
என்றிருந்த நம் முன்னோர்களை விட அதிகமாக ஏராளமான தேவைகளை ஏற்படுத்திக்
கொண்டு வாழ்க்கையை சிக்கலாக்கி வைத்திருக்கும் நாம் அவ்வப்போது அந்த குழப்ப
நிலைக்கு வந்து விடுகிறோம். மேற்கொண்டு செல்லும் வழியறியாது தடுமாறி
நிற்கிற அது போன்ற தருணங்களில் எல்லாம் அணையா விளக்காக ஒளிரும் கீதை நமக்கு
தெளிவான வழியைக் காட்டுகிறது.

ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்ட
மகத்தான இதிகாசமான மகாபாரதத்தில் பீஷ்ம பர்வத்தில் 25 முதல் 42 வரை உள்ள 18
அத்தியாயங்களே பகவத் கீதை. வியாசர் வேதங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றின்
முழு சாராம்சத்தையும் பகவத் கீதையில் தந்துள்ளார். குருட்டு மன்னன்
திருதராஷ்டிரன் “தர்மக்‌ஷேத்ரமான குருக்‌ஷேத்திரத்தில்” என்ன நடக்கிறது
என்று சஞ்சயனிட்ம் கேட்க, சஞ்சயன் வியாச முனிவரால் அளிக்கப்பட்ட
ஞானதிருஷ்டியால் அங்கு நடப்பதை நேரடி ஒளிபரப்பாகக் கண்டு சொல்ல
ஆரம்பிக்கிறான். ஆக பகவத்கீதையே தர்மம் என்ற சொல்லில் இருந்து தான்
ஆரம்பமாகிறது.

தர்மம் என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு இணையான சொல்லை
எந்த மொழியிலும் சொல்வது எளிதல்ல. சரி, நியாயம், வள்ளல் தன்மை, கடமை,
விதிமுறை என்று பல பொருள்கள் அதற்கு இருக்கின்றன. ஆனால் அந்த பொருள்களில்
எதுவுமே தனியாக முழுமையான பொருளைத் தந்து விடுவதில்லை. பொதுவாகச் சொல்ல
வேண்டும் என்றால் எப்படி ஒருவன் இருக்க வேண்டுமோ அப்படி இருப்பது தர்மம்.
அப்படி இருக்கும் வரையில் மனிதன் தானும் அமைதி அடைகிறான், பிறர்
அமைதிக்கும் தீங்கு விளைவிக்காமல் இருக்கிறான். அப்படி இல்லாத போது, அந்த
தர்ம நெறியில் இருந்து விலகும் போது மனிதன் தானும் அமைதியிழந்து
பிறர்க்கும் தீங்கிழைக்கிறான். எனவே அவரவர் தர்மத்தின் படி ஒவ்வொருவரும்
இருப்பார்களேயானால் உலகம் அமைதிப்பூங்காவாகி சிறப்பாக இயங்கி வரும்.


கீதையின் முதல் அத்தியாயமான அர்ஜுன விஷாத யோகத்தில் அர்ஜுனன் தன் தர்மம்
மறக்கிறான். அதுவே அவன் கலக்கத்திற்கும் குழப்பத்திற்கும் காரணமாக
அமைகிறது. பாண்டவ, கௌரவ சேனைகளுக்கு மத்தியில் தன் தேரை ஓட்டிச் சென்று
நிறுத்தும்படி அர்ஜுனன் சொல்ல பகவான் கிருஷ்ணனும் அப்படியே செய்கிறார்.
இருபுறமும் அர்ஜுனன் பார்வையைச் செலுத்துகிறான். உற்றார், உறவினர்,
சுற்றத்தார், நண்பர்கள், குருமார்கள் முதலானோரே இருபக்கமும் இருக்கக்
கண்டான். அனைவரும் தன்னுயிரைத் துறக்கவும், பிறர் உயிரைப் பறிக்கவும்
தயாராக உறுதியுடன் கூடி இருக்கும் நிலையைப் பார்த்த போது அவனுக்குள்ளே
விவரிக்க முடியாத துக்கம் ஏற்பட்டது. இத்தனை பேருக்கு அழிவை ஏற்படுத்தி
பெறக்கூடிய வெற்றி வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. அவன் கண்கள் கலங்கின.
கையிலிருந்து காண்டீபம் நழுவியது. உடல் நடுங்கியது. போர் புரிய வேண்டாம்
என்று முடிவு செய்கிறான்.

கிருஷ்ணனுக்கே அவன் போரின் தீய
விளைவுகளை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தான். போரினால் குலம் அழியும், அதர்மம்
பெருகும், மக்கள் மனம் போன படி நடந்து கொள்ள ஆரம்பிப்பார்கள், விபசாரம்
அதிகரிக்கும், பஞ்சம் வரும், பல சமூகப் பிரச்னைகள் தோன்ற ஆரம்பிக்கும்
என்றெல்லாம் எடுத்துச் சொன்னான். அவன் சொன்ன எதிலுமே உண்மை இல்லாமல் இல்லை.
ஆனால் அவன் சொல்லாத ஒரு உண்மை அத்தனை பேச்சுக்கும் அடித்தளமாக இருந்தது.
அது தன் அன்பிற்குரியவர்கள் மீது அவனுக்கு இருந்த அளவு கடந்த பாசம் தான்.
அவர்கள் அல்லாமல் வேறு யார் எதிரணியிலிருந்தாலும் அவர்களைக் கொன்று
குவிப்பதில் அவனுக்கு எள்ளளவும் வருத்தம் இருந்திராது. அவனுக்கு யுத்தங்கள்
புதிதல்ல. அவன் கொன்று குவித்த ஆட்களும் குறைவல்ல. அவனுடைய உடலெல்லாம்
வீரம் நிரம்பியே இருந்தது. அக்ஞாத வாசத்தின் இறுதியில் உத்தரனுக்காக
தனியொருவனாக நின்று பீஷ்மர், திரோணர், கிருபர், துரியோதனன், கர்ணன் ஆகியோரை
எதிர்கொண்டு வெற்றி பெற்றவன் அவன். ஆனால் இத்தனை நாள் வராத ஞானோதயம்
இப்போது அவனுக்கு வரக் காரணம் இந்த மகத்தான யுத்தத்தில் பலருடைய மரணத்தின்
மூலம் தான் வெற்றி சாத்தியம் என்பது தான். அப்படி இறக்கப் போகிறவர்கள்
அவனுடைய பாசத்திற்கு உரியவர்கள் என்பது தான்.

அசோகனுக்கு
கலிங்கப் போரில் ஏற்பட்ட மாற்றம் உண்மையானது. இறந்தவர்கள் அவனது உறவினர்கள்
அல்ல. ஆனால் அந்த போரின் அழிவுக் காட்சிகளைப் பார்த்த போது அவன் மனதில்
ஏற்பட்ட துக்கமும், போரின் வெற்றி மகிழ்ச்சிக்குப் பதிலாக ஒரு வெறுமையை உணர
வைத்ததும் மன ஆழத்திலிருந்து வந்தவை. அதனால் அது அவனுடைய பிற்பகுதி
வாழ்க்கையை ஒரேயடியாக மாற்றி விட்டது. அர்ஜுனன் மாற்றம் அப்படிப்பட்டதல்ல.
கடமையை ஆற்ற வேண்டிய தருணத்தில் பாசமிகு உறவுகளையும், அன்பு வைத்த
மனிதர்களையும் கண்ட பின் வந்த தயக்கம் அவனுடையது.

சூதினாலும்,
சூழ்ச்சியினாலும் கவர்ந்த இராஜ்ஜியத்தை முழுவதும் கொடுக்கா விட்டாலும்
ஐந்து கிராமங்களையாவது தருமாறு தர்மபுத்திரன் மிக அதிகமாகத் தாழ்ந்து வந்த
போதும் ஊசிமுனை அளவு இடமும் தர மாட்டேன் என்று அகம்பாவத்தோடு மறுத்தவன்
துரியோதனன். அவனைப் போன்றவனிடம் அவர்களுடைய இராஜ்ஜியத்தை விட்டு விட்டால்
அவன் ஆளும் மக்களுக்கு என்ன நன்மை செய்வான்? அவர்கள் படப்போகும்
துன்பங்களுக்கெல்லாம் விட்டுக் கொடுத்த இவர்களே அல்லவா
முழுக்காரணமாவார்கள். நல்லாட்சி புரிந்து மக்களைக் காப்பாற்ற வேண்டியவர்கள்
சூதினால் ஆட்சியை கொடியவர்களிடம் இழந்தது மட்டுமல்லாமல் திரும்பப் பெறாமல்
தத்துவம் பேசி விட்டுக் கொடுப்பது அந்த மக்களுக்கிழைக்கும் தர்மமாகுமா?
அதை விடப் பெரிய அதர்மம் என்ன இருக்க முடியும்? தனிப்பட்ட விருப்பு
வெறுப்புகளுக்காக லட்சக்கணக்கான மக்களுக்கு அநீதி ஏற்படுத்துவது எந்த
விதத்தில் தர்மம்?

மனம் பலவீனமாக இருக்கின்ற நேரத்தில் செயல்பட
வேண்டிய மனிதன் செயல்படாமல் இருக்க ஆயிரம் காரணங்கள் கண்டுபிடிப்பான். மனித
சுபாவத்தில் அன்றும் இன்றும் இது இயல்பே. தன் மனதில் தோன்றிய நல்லவை,
கெட்டவை அனைத்தையும் ஒளிவு மறைவின்றி அப்படியே பகவானிடம் கொட்டிய அர்ஜுனன்
கடைசியில் தன் குதிரையின் கடிவாளங்களை கிருஷ்ணனிடம் ஒப்படைத்தது போலவே தன்
மனதின் கடிவாளத்தையும் அவரிடம் ஒப்படைத்து சரணடைந்தான். “நான் சிறியவன்.
குறை மிகுந்தவன். தர்மம் எது என்பதை அறியாதவன். என் அறிவு மயங்குகிறது.
அதனால் உன்னைக் கேட்கின்றேன். தர்மம் எது என்று எனக்கு உறுதியாகச் சொல்.
நான் உன் சீடன், உன்னையே நான் சரணடைகின்றேன்”

வாழ்க்கையில்
எத்தனையோ குழப்பங்களிலும், பிரச்னைகளிலும் சிக்கி நமக்குள்ளே ஒரு
குருக்‌ஷேத்திரத்தை அடிக்கடி கண்டு தவிக்கும் நாமும் அர்ஜுனன் செய்ததையே
செய்வோம். நம்முள்ளே அந்தர்மியாய் இறைவன் இருக்கிறார். அவர் அனைத்தும்
அறிந்தவர். நம்முடைய பிரச்னைகளையும், சிக்கல்களையும், துக்கங்களையும் அவர்
முன் வைத்து வழி காட்ட வேண்டும் என்று வேண்டி சரண் அடைவோம். அவர்
கண்டிப்பாக வழி காட்டுவார்!
logu
logu

Posts : 69
Join date : 01/08/2011

Back to top Go down

கீதை காட்டும் பாதை Empty Re: கீதை காட்டும் பாதை

Post by logu August 5th 2011, 20:11

இந்த துக்கம் அர்த்தமற்றது!


ஒருவர் பேசுவதை இடைமறிக்காமல் முழுவதுமாகக் கேட்பது மிகப் பெரிய அபூர்வமான
கலை. அது எல்லோருக்கும் கைகூடுவதில்லை. ஒருவர் பேசப் பேச இடையிடையே தங்கள்
கருத்தையும், எண்ணத்தையும் சொல்லத் தோன்றும். அதே போல அறிவுரையை
யாருக்கும், எப்போதும், இலவசமாக அறிவுரை வழங்கத் தயாராக இருப்பவர்கள்
அதிகம். கேட்டால் மட்டுமே, தேவைப்பட்டவர்களுக்கு மட்டுமே சரியான அறிவுரை
சொல்ல முற்படுவதும் அபூர்வமே. இந்த இரண்டு அபூர்வத் தன்மைகளையும் பகவான்
கிருஷ்ணனிடம் நாம் பார்க்க முடிகிறது. திடீரென்று தத்துவஞானியாக மாறிய
அர்ஜுனன் யுத்தத்தால் குலநாசம் வரும், பல தலைமுறைகளுக்கு அதர்மம் சூழும்
என்றெல்லாம் கண்டுபிடித்து சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தி முடிக்கும் வரை
பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணன், அவன் ”உன்னை சரணடைகிறேன், எது
தர்மம் என்று சொல்” என்று சொன்ன பின்னரே தன் உபதேசத்தை ஆரம்பிக்கிறார்.


பகவத் கீதையின் இரண்டாம் அத்தியாயமான சாங்கிய யோகத்தில் பதினோராம்
சுலோகத்தில் இருந்து தான் பகவான் கிருஷ்ணனின் உபதேசம் ஆரம்பமாகிறது.


“யாருக்காக துக்கப்பட வேண்டாமோ, அவர்களுக்காக நீ துக்கப்படுகிறாய்.
விவேகிகள் இருப்பவர்களுக்காகவும், இறந்தவர்களுக்காகவும் வருத்தப்பட
மாட்டார்கள்.

நானோ நீயோ, இந்த மன்னர்களோ ஒரு காலத்திலும் இராமலிருந்ததில்லை. இனிமேலும் நம்மில் எவரும் இராமலிருக்கப் போவதுமில்லை.


உடல் எடுத்த ஆன்மாவுக்கு இந்த உடலில் குழந்தைப் பருவம், இளமைப்பருவம்,
மூப்பு ஆகியவை எப்படியோ மற்றொரு உடலை அடைவதும் (அதாவது மறுபிறப்பும்).
விவேகி இதற்கு மயங்குவதில்லை.

இந்த ஆன்மா ஒரு போதும்
பிறப்பதில்லை. ஒரு போதும் இறப்பதில்லை. இது இல்லாதிருந்து பின்
உண்டாவதில்லை. பிறப்பில்லாதது, என்றும் இருப்பது, புராதனமானது. உடல்
கொல்லப்பட்டலும் ஆன்மா கொல்லப்படுவதில்லை.

கிழிந்த துணிகளைக்
களைந்து எறிந்து விட்டு மனிதன் புதிய துணிகளை அணிந்து கொள்வது போல் ஆத்மா
சிதைந்து போன உடம்புகளைக் களைந்து விட்டு புதிய உடம்பைப் பெற்றுக்
கொள்கிறது”

என்று பகவான் கிருஷ்ணன் உடலின் நிலையாமை குறித்தும், ஆன்மாவின் நிரந்தரத்தன்மை குறித்தும் சொல்கிறார்.


ஒரு மனிதன் தன் உடலையே தானாகவும், தன் அடையாளமாகவும் காண முற்படும் போது
அவன் கணக்கற்ற துன்பங்களைப் பெற வலுவான அஸ்திவாரத்தை ஏற்படுத்திக்
கொள்கிறான். கிட்டத்தட்ட அனைத்து துக்கங்களுக்கும் மூல காரணம் அப்படி
உடலையே “நான்” என்றும் “மற்றவர்” என்றும் எடுத்துக் கொள்ளும் அறியாமையே.
எனவே தான் பகவான் கிருஷ்ணன் ஆரம்பத்திலேயே அந்த அறியாமையை சுட்டிக்
காட்டுகிறார்.

நம் உடலில் ஒவ்வொரு நொடியும் ஆயிரக்கணக்கான
செல்கள் பிறக்கின்றன, ஆயிரக்கணக்கான செல்கள் அழிகின்றன என்று இன்றைய
விஞ்ஞானம் சொல்கிறது. மனித உடல் சில மாதங்களில் முற்றிலும் புதியதாக மாறி
விடுகிறது என்றும் பழைய செல்களில் ஒன்று கூட அப்போது உடலில் எஞ்சி
இருப்பதில்லை என்றும் நவீன விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இன்று ஒரு
தாவரத்தில் இருக்கும் செல், நாளை நம் உடம்பினுள்ளே இருக்கலாம். சில நாட்கள்
கழித்து ஒரு விலங்கின் உடலில் அந்த செல்லைக் காணலாம். இப்படி உடல் இயங்கத்
தேவையாக இருக்கும் செல்கள் கூட நம்மிடம் நிரந்தரமாக இருப்பதிலை. இன்று
“நான்” என்று சொல்வதில் ஒரு பகுதியாக இருந்த செல் ஒரு நாள் தாவரத்தின்
’நானாக’ இருக்கிறது, இன்னொரு நாள் விலங்கின் ‘நானாக’ இருக்கிறது. இப்படி
மாறிக் கொண்டே இருக்கும் உடலில் எது நம்முடையது? கணந்தோறும் மாறுவதும்,
கணந்தோறும் அழிவதுமான உடல் தான் நாமா?

இந்த செல்கள் பற்றிய
விஞ்ஞானம் எல்லாம் எனக்குத் தெரியாது, என்னைப் பொறுத்த வரை பார்வைக்கு உடல்
தொடர்ந்து இருக்கிறது என்று சொன்னால் கூட குழந்தைப் பருவம், இளமைப்
பருவம், நடுத்தர வயதுப் பருவம், வயோதிகம் என்று பார்வைக்குக் கூட உடல்
மாறிக் கொண்டே போகிறதே இதில் எது நீ என்ற கேள்வி எழுகிறது.


மேலும் உடலின் பிறப்புடன் ஆன்மா உருவாவதில்லை. உடல் இறக்கும் போது ஆன்மா
அழிந்து போவதுமில்லை. என்றும் இருக்கும் ஆன்மாவிற்கு உடல் ஒரு ஆடையைப்
போலத் தான். இந்த எண்ணம் மனதில் ஆழப்பதிந்தால் மரணம், அது யாருடையதானாலும்,
நம்மை வருத்தாது. தினம் தினம் உடை மாற்றுகிறோமே அதற்காக நாம்
துக்கப்படுகிறோமா?

நீங்கள் உபயோகிக்கும் கருவி நீங்களாகி விட
முடியாது. நீங்கள் எடுத்திருக்கும் இந்தப் பிறவி முழுவதும் நீங்கள்
உபயோகிக்கும் கருவி தான் இந்த உடல். இதை நீங்களாக அடையாளம் காணும் போது
அந்த அடையாளம் அத்துடன் நின்று போவதில்லை. அதனுடன் ஒரு பட்டாளமே கூட்டு
சேர்ந்து விடுகிறது. நான், எனது மனைவி, எனது கணவன், எனது பிள்ளைகள், எனது
நண்பர்கள் என்று அந்த ‘நானு’டன் நாம் இணைக்கும் கூட்டம் எல்லாமே சேரும்
போது ஒன்றில்லா விட்டால் இன்னொன்று என்று ஏதாவது ஒரு துக்கம் நம்மைப்
பாடாய் படுத்துகிறது. அத்துடன் நிற்காமல் எனது சொத்து, எனது பூமி, எனது
செல்வாக்கு, எனது பதவி என்று நாம் தேடி சம்பாதித்ததும் நம்முடைய ‘நானு’டன்
சேரும் போது இதற்கெல்லாம் வரும் சின்ன சின்ன நஷ்டங்கள் கூட நம்மைப் பாடாய்
படுத்தும் சக்தி பெற்று விடுகிறது. வருத்தப்பட நிறைய காரணங்கள் நமக்குக்
கிடைத்து விடுகின்றன. எனவே தான் பகவான் கிருஷ்ணன் இத்தனைக்கும் மூல வேரான
இந்த உடலை நானாக நினைக்கும் அறியாமையின் முட்டாள்தனத்தை ஆரம்பத்திலேயே
சுட்டிக் காட்டுகிறார். அந்த அறியாமை நம்மை விட்டு விலகும் போது அதனுடன்
சம்பந்தப்பட்ட அத்தனை துக்கமும் நம்மிடம் இருந்து விலகுகின்றன.

பகவான் கிருஷ்ணன் மேலும் சொல்கிறார்.

“இந்த ஆன்மா எப்போதும் பிறப்பதாயும், இறப்பதாயும் நீ எண்ணினாலும் அப்போது கூட நீ துக்கப்படுவது சரியல்ல.

பிறந்தவன் இறப்பதும் இறந்தவன் பிறப்பதும் நிச்சயம். உன்னால் தவிர்க்க முடியாததற்கு நீ வருந்தி என்ன பயன்?”


பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனிற்காகவும், தத்துவங்களில் பெரிய நம்பிக்கை
இல்லாதவர்களுக்காகவும், இன்னும் ஒரு படி இறங்கி வருகிறார். எனக்கு இந்த
ஆன்மா பற்றிய தத்துவ விசாரங்கள் எல்லாம் பிடிபடவில்லை, எனக்கு உடல் தான்
நான் என்று தோன்றுகிறது சொல்கிறவர்களுக்கு அவர் கேட்கும் கேள்வி தான் இது.

“நெருனல் உளனொருவன் இன்றில்லை எனும்
பெருமை உடைத்திவ் வுலகு”
என்று
திருவள்ளுவர் சொன்னது போல உலகத்தில் நேற்று வரை வாழ்ந்தவனும் திடீர் என்று
இன்று இல்லாமல் போவது இயல்பல்லவா? பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பும்
நிச்சயமல்லவா?

கிங் லியர் நாடகத்தில் ஷேக்ஸ்பியர் சொன்னது போல
”இந்த உலகத்திற்கு வருவதைப் போலவே இந்த உலகை விட்டுப் போவதையும் நாம்
சகித்துக் கொள்ளவே வேண்டும்” அல்லவா?

எல்லோருக்கும் பொதுவாக
இருக்கும் இந்த விதிக்கு நாமும் கட்டுப்பட்டவர்களே அல்லவா? உலகில் வாழும்
ஒவ்வொரு உயிருக்கும் இது இயல்பான நிகழ்வே அல்லவா? ஒரு விதத்தில் பார்த்தால்
நாம் இதை எதிர்பார்த்தே அல்லவா இருக்க வேண்டும்? பின் ஏன் நம் விஷயத்தில்
நிகழும் போது நாம் பெருந்துக்கத்தில் அழுந்த வேண்டும்? மாறுதல் ஒன்றே மாறாத
நியதி அல்லவா? நம் விஷயத்தில் மட்டும் அந்த நியதி மாறுபட வேண்டும் என்று
ஆசைப்படுவது எந்த விதத்தில் நியாயம்?

இந்த உண்மைகளை எல்லாம்
சொல்வது ஒருவன் ‘கல் மனம்’ கொண்டவனாய் மாறி விட வேண்டும் என்பதற்கல்ல.
மரணம் நிகழும் போது, இழப்புகளை சந்திக்கும் போது, உடனடியாக வருத்தப்படுதல்
சாதாரண மனிதர்களுக்கு இயல்பே. ஆனால் அதிலிருந்து உடனடியாக மீளுதல் மிக
முக்கியம். அதைப் பெரிது படுத்தி சோகப் பெருங்கடலில் மூழ்க ஆரம்பிப்பதற்கு
பதிலாக இந்த உண்மைகளை உள்ளத்தில் பதித்து, தெளிந்து, அடுத்ததாகச் செய்ய
வேண்டியதைச் செய்ய ஆரம்பிப்பது புத்திசாலித்தனம். நம்மை சில இழப்புகள்
செயலிழக்க வைத்து விடாமல் நம் வாழ்க்கைப் பாதையில் நாம் தொடர்ந்து முன்னேற
இந்த உண்மைகள் நமக்கு பேருதவியாக இருக்கும்.











logu
logu

Posts : 69
Join date : 01/08/2011

Back to top Go down

கீதை காட்டும் பாதை Empty Re: கீதை காட்டும் பாதை

Post by logu August 5th 2011, 20:11

சுதர்மமே சிறந்தது!

இன்றைய கால கட்டத்திற்கு மிகவும் அவசியமான ஒரு தத்துவத்தை பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் சொல்லி இருக்கிறார். அது தான் சுதர்மம்.


பகவத்கீதையின் ஆரம்பம் ”தர்மம்” என்ற சொல்லில் துவங்குவதை முன்பு
குறிப்பிட்டிருந்தேன். பகவத் கீதை “மம” என்ற சொல்லில் முடிகிறது. ’மம’
என்றால் “என்னுடைய” என்று அர்த்தம். “தர்மம்” மற்றும் “என்னுடைய” என்ற
சொற்களுக்கிடையில் 700 சுலோகங்கள் கொண்ட பகவத் கீதை ஒளிர்கிறது. இதைக்
குறிப்பிடும் பல அறிஞர்கள் “என்னுடைய தர்மம்” என்பதன் விளக்கமே பகவத்
கீதையின் முழு சாராம்சமும் என்று சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது உண்மையே.
அர்ஜுனனிற்கு தர்மம் எது என்று விளக்கிய கீதையைப் படிக்கையில் அவரவர்
தர்மத்தை ஒவ்வொருவரும் உணராமல் இருக்க முடியாது. சுதர்மம் பகவத் கீதையின்
மிக முக்கியமான தத்துவம்.

ஆன்மாவின் நிரந்தரத்தையும், உடலின்
அழியும் தன்மையையும் கூறிய பகவான் சுதர்மம் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார்.
அரசகுலத்தவனான அர்ஜுனனுக்கு அறப் போரைக் காட்டிலும் சிறந்த சுயதர்மம் இல்லை
என்றும், தேடாமலேயே வரும் தர்மயுத்தம் சொர்க்கத்தின் கதவைத் திறந்து
வைத்திருப்பதைப் போன்றது என்றும், அதிர்ஷ்டசாலிகளிகளுக்கு மட்டுமே
வாய்க்கக் கூடிய பாக்கியம் என்றும் சொல்கிறார். அந்த அறப்போரை நடத்தாமல்
போனால் கடமையையும், கௌரவத்தையும் கொன்று பாவத்தை அடைய நேரிடும், பழி வந்து
சேரும் என்று எச்சரிக்கிறார்.

இப்படி எல்லா கோணங்களிலும் பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனிற்கு வலியுறுத்தும் சுதர்மத்தை சற்று விளக்கமாகப் பார்ப்போம்.


ஒரு மனிதன் பிறக்கும் போதே அவன் சுதர்மமும் பிறந்து விடுகிறது. ஒருவன்
எதற்காக படைக்கப்பட்டானோ அதைச் செய்வது அவன் சுதர்மம். ஒருவனுடைய சுதர்மம்
அவன் உண்மையான இயல்பையும், மனப்போக்கையும் ஒத்து அமைவது. அந்த சுதர்மத்தை
ஒட்டியே அவன் திறமைகளைப் பெற்றிருப்பான். அதை செய்வதாலேயே அவன் அமைதி அடைய
முடியும். இதில் உயர்ந்தது, தாழ்ந்தது என்று ஒன்றும் கிடையாது. சுலபம்,
சிரமம் என்றெல்லாம் கணக்கிட்டு எடுத்துக் கொள்வதோ, தள்ளி விடுதலோ கூடாது.


பிறரது தர்மம் சில சமயங்களில் சிறந்ததாகத் தோன்றலாம். ஆனால் அதைக்
கடைபிடிப்பதால் நன்மை உண்டாகாது. வினோபா கூறுவார்: “மீன்களிடம் ‘நீரை விட
பால் அதிக மதிப்புடையது. அதனால் நீங்கள் பாலில் வந்து வாழுங்கள்’ என்று
எவரேனும் சொல்வாராயின் மீன்கள் அதை ஏற்குமா? மீன்கள் நீரில் தான் வாழும்.
பாலில் அவை இறந்து போகும்”.

அதே போல பிறரது தர்மம் சுலபமாகத்
தோன்றலாம். அப்படி தோன்றி அதைக் கடைபிடித்தாலும் அது ஒருவர் வாழ்வை
சிறப்பிக்காது. அர்ஜுனனுக்கு இந்த போரைச் செய்வதை விட சன்னியாசம் பெற்றுக்
கொண்டு எங்காவது போய் விட்டால் நிம்மதி கிடைக்கும் என்று தோன்றினாலும்
அவனால் உண்மையாக சன்னியாசியாக முடியுமா? காட்டுக்கே போனாலும்
எல்லாவற்றையும் துறந்து விட அவனால் முடியுமா? அஹிம்சையை அவனால் பின்பற்ற
முடியுமா? அவனால் சும்மா இருக்க முடியுமா? ஓரிரு நாட்களுக்கு அவனது இயல்பான
தன்மைகளை அவன் அடக்கி வைக்கலாம். ஆனால் அத்தன்மைகள் விரைவில் அவனையும்
மீறியல்லவா வெளிப்படும்.

இது அவன் பிரச்னை மட்டுமல்ல. நம்மில்
பலருடைய பிரச்னையும் தான். நமக்கு அடுத்தவர்கள் தொழில் சுலபமாகத் தெரியும்.
இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல், நம்முடைய வேலைகளில் இருக்கும் எல்லா
கஷ்டங்களும் தெரியும் நமக்கு அடுத்தவர்கள் தொழில் பிரச்னை இல்லாததாகத்
தெரியும். அவரவர் தொழிலில் உள்ள பிரச்னைகளை அவரவரே அறிவார்கள். அடுத்தவர்
தொழிலை சில நாட்கள் செய்து பார்த்தால் தான் அதில் உள்ள சிக்கல்கள்
புரியும். எனவே பிரச்னைகளைப் பார்த்து பின்வாங்கி அடுத்தவர்களுடைய கடமையோ,
தொழிலோ நம்முடையதை விட சிறந்தது என்று எண்ணுவது உண்மைக்குப் புறம்பானது.


எதற்காகப் பிறந்தோமோ அதைச் செய்யாமல் யாரும் தங்கள் வாழ்வில் நிறைவையும்,
அமைதியையும் பெற முடியாது. இது இந்தக் காலத்திய மனிதர்கள் அலட்சியம்
செய்யும் ஒரு மாபெரும் உண்மையாகும். இன்று தொழிலில் உயர்வு, தாழ்வு என்று
பார்க்கிறோம். இலாப நஷ்டங்கள் பார்க்கிறோம். ஆனால் நம் இயல்புக்கும்,
திறமைக்கும் ஏற்ற தொழில் தானா, இதில் நமக்கு மனநிறைவு கிடைக்குமா
என்றெல்லாம் பார்க்க மறந்து விடுகிறோம். இன்றைய இளைஞர்களை மூளைச்சலவை
செய்து டாக்டர்களாக்கவும், இன்ஜீனியர்களாக்கவும் மட்டுமே ஆக்க, படாத பாடு
படும் பெற்றோர்கள் இதை எண்ணிப்பார்க்க மறந்து விடுகிறார்கள்.


எதில் நமக்கு உண்மையான ஈடுபாடு உள்ளதோ அதை ஒட்டியே நம் சுதர்மம் அமையும்.
எது சுதர்மம் என்று அறிந்து கொள்ள அங்குமிங்கும் செல்ல வேண்டாம். மனதினுள்
ஆத்மார்த்தமாகக் கேட்டுக் கொண்டால் போதும். அப்போது பதில் கிடைக்கும்.
சுதர்மத்தின் வழியே நடக்கையில் கிடைக்கும் சந்தோஷமே அலாதி. அப்படி
நடக்கையில் தான் ஒரு மனிதன் உண்மையாக வாழ்கின்றான்.

கணித மேதை
பாஸ்கலின் தந்தை அவரை கிரேக்கம், லத்தீன் போன்ற பழைய மொழிகளில்
பாண்டித்தியம் பெற வைக்க எண்ணினார். ஆனால் பாஸ்கலுக்கோ கணிதம் என்றால்
உயிராக இருந்தது. அவருடைய தந்தை கணித புத்தகங்கள், உபகரணங்கள் எல்லாம்
அவருக்குக் கிடைக்காதபடி செய்து பாஸ்கலை ஒரு அறையில் அடைத்து வைத்துப்
பார்த்தார். பாஸ்கல் பூட்டிய அறைக்குள் கரித்துண்டால் தரையில் கணிதக்
குறியீடுகளால் கோட்பாடுகளை எழுதிப் பார்ப்பார். ஒரு கால காலத்தில் அவருடைய
தந்தை தன் தோல்வியை ஒப்புக் கொண்டு அவருக்கு விட்டுக் கொடுக்க
வேண்டியதாயிற்று. பாஸ்கல் தன் தந்தையின் கட்டாயத்திற்காகத் தன் கணித
ஈடுபாட்டை தியாகம் செய்திருந்தால் இன்று இந்த உலகம் எத்தனையோ கணித
மேம்பாட்டை இழந்திருக்கும்.

ஒவ்வொருவரும் அவரவர் சுயதர்மத்தின்
படி, இயல்பாக அமைந்துள்ள திறமையின் படி செயல் புரியும் போது அவர்களும்
நிறைவை உணர்கிறார்கள். அவர்களால் சமூகத்திற்கும் நன்மைகள் கிடைக்கின்றன.
அப்படி இல்லாமல் அதற்கு எதிர்மாறாக அவர்கள் இயங்கும் போது அவர்களும்
சந்தோஷமாக இருப்பதில்லை. அவர்களால் உண்மையான நற்பலன்கள் கிடைப்பதும் அரிதாக
இருக்கிறது.

பண்டைய காலத்தைப் போல இக்காலத்தில் வாழ்க்கை முறை
எளிமையாக இல்லை. நடைமுறைச் சிக்கல்களும் தற்போது அதிகம் இருக்கின்றன.
வருமானத்தை வைத்தே வாழ்க்கையின் வெற்றி இக்காலத்தில் தீர்மானிக்கப்
படுகிறது. சில துறைகளில் ஒருவருக்கு மிகுந்த ஈடுபாடும், திறமையும்
இருக்கலாம். ஆனால் அத்துறையிலோ வருமானம் சிறிதும் இல்லை என்றால் அவர்
எப்படி சுதர்மத்தை மேற்கொள்ள முடியும் என்ற கேள்வி எழுவது நியாயமே. அப்படி
வருமானத்திற்காக வேறு ஒரு தொழில் செய்ய நேர்ந்தாலும் பகுதி நேரமாவது தனக்கு
இயல்பாக திறமையும் ஆர்வமும் உள்ள துறைக்கு ஒருவர் ஒதுக்க வேண்டும்.


இதைத் தான் விமானத்தைக் கண்டு பிடித்த ரைட் சகோதரர்கள் செய்தார்கள்.
பணவசதி அதிகம் இல்லாத அவர்களுக்கு விமானத்தை உருவாக்கும் முயற்சியில்
முழுவதுமாக ஈடுபட முடியாத சூழ்நிலை இருந்தது. ஆராய்ச்சி பல ஆண்டுகள்
நீண்டதால், அதற்கு நிறையவே பணமும் தேவைப்பட்டதால், அவர்கள் தினசரி
வருமானத்திற்கு சைக்கிள் கடை ஒன்றை வைத்து பல ஆண்டுகள் தங்கள் பிழைப்பை
நடத்தினார்கள். ஓய்வு நேரங்களில் அவர்கள் விமான ஆராய்ச்சிகளையும்
செய்தார்கள். அதனாலேயே அவர்களால் சரித்திரத்தில் இடம் பிடிக்க முடிந்தது.


எத்தனையோ துறைகளில் பெரும் சாதனைகள் புரியும் அளவு திறமை உள்ளவர்கள்
வருமானம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வேறு ஒரு தொழிலில் முழு நேரமும்
தங்களை ஈடுபடுத்திக் கொள்வதை நாம் இன்று பல இடங்களில் பார்க்கிறோம்.
அவர்கள் தங்கள் வாழ்க்கையில் வெறுமையினை அடிக்கடி உணர்கிறார்கள் என்பது
கூர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும். அவர்களுடைய தனித் திறமையைப் பற்றி
யாராவது நினைவுறுத்தினால் அவர்கள் முகத்தில் சோகம் படர்வதையும் பார்க்க
முடியும். எது நமது உண்மையான இயல்போ, எதைச் செய்கையில் நாம் நூறு சதவீதம்
நாமாக இருக்கிறோமோ, அதற்கு எதிர்மாறாக வாழ்ந்து யாரும் நிறைவைக் காண
முடியாது. எனவே இக்காலத்தில் சூழ்நிலையின் காரணமாக வேறு தொழில் பார்க்க
வேண்டிய நிர்ப்பந்தம் வந்தாலும் ஒருவன் சுதர்மத்தை அடியோடு மறந்து
விடக்கூடாது.

சுதர்மத்தை கைவிடுவது தற்கொலைக்கு சமமானது.
இதனாலேயே பகவான் கிருஷ்ணன் சுதர்மத்தை மிக முக்கியமாக வலியுறுத்துகிறார்.
இன்னொரு இடத்தில் “சுயதர்மத்தைச் செய்கையில் ஒருவன் இறந்து போனாலும்
நல்லதே” என்று கூட கூறுகிறார். சுதர்மத்தைப் பின்பற்றாமல் இருக்க எத்தனையோ
காரணங்களை ஒருவன் தேடிக் கண்டுபிடிக்க முடியும். ஆனால் அந்தக் காரணங்களில்
ஒன்று கூட மேன்மையானதாக இருக்க முடியாது.

இக்காலத்தில் தொழிலில்
நேர்மையில்லை, ஈடுபாடில்லை, உயிரில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகள்
அதிகம் எழுவதற்குக் காரணம் மனிதர்கள் சுதர்மத்தைப் புறக்கணிப்பது தான்.
எந்திரங்களாய் அவர்கள் மாறிவிடக் காரணமும் அது தான்.
logu
logu

Posts : 69
Join date : 01/08/2011

Back to top Go down

கீதை காட்டும் பாதை Empty Re: கீதை காட்டும் பாதை

Post by logu August 5th 2011, 20:13

எதெல்லாம் சுதர்மம்?

சுதர்மத்தின்
முதல் படி ஒவ்வொருவரும் தங்களுக்கு உண்மையாக நடந்து கொள்வதே. தங்களுக்கு
உண்மையாக நடந்து கொள்ள முடியாதவர்கள் அடுத்தவர்களுக்கு எப்படி உண்மையாக
நடந்து கொள்ள முடியும்? எனவே தான் பிறப்பாலும், தன்மையாலும் வீரனான
அர்ஜுனன், அது வரையில் தன் சுதர்மத்தைப் பின்பற்றி வாழ்ந்ததில் எந்த
பிரச்னையும் இல்லாத அர்ஜுனன், குருக்‌ஷேத்திர பூமியில் மடியப் போகும்
உறவுகளைக் கண்டு சுதர்மத்தை விட்டு விலக நினைப்பதை தவறு என பகவான்
கிருஷ்ணர் சுட்டிக் காட்டுகிறார்.

சுதர்மத்தின் அடுத்த படி என்ன?
மற்றவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள். நாம் பிறக்கும் போதே அந்த கடமைகளும்
பிறந்து விடுகின்றன. எந்த பெற்றோருக்குப் பிள்ளையாகப் பிறந்தோமோ
அவர்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகள், எந்த சமூகத்தில் நாம் பிறக்கிறோமோ
அதற்கு செய்ய வேண்டிய சேவைகள் ஆகியவை எல்லாம் சுதர்மத்தின் அடுத்த படி
ஆகின்றன. இன்னொரு விதமாக சொல்லப் போனால் அந்தக் கடமைகள் நாம் பிறக்கும்
முன்னே நமக்காகக் காத்திருக்கின்றன. நம் பெற்றோர், சமூகம், நாடு என்று நாம்
வாழ எங்கிருந்தெல்லாம் பலன்களை அடைகிறோமோ அங்கெல்லாம் நம் கடமைகளும் கூடவே
இருக்கின்றன என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

இது ஒரு வழிப்
பாதையல்ல. பலனாக அவர்களிடம் இருந்து நேரடியாகவோ, வேறு வழியாகவோ நாம் நிறைய
பெறாமல் வளர்ந்து ஆளாக முடியாது. அந்தக் கடனைத் திருப்பித் தந்தாக
வேண்டும். அதுவே சுதர்மம். இங்கு கடன் தள்ளுபடி இல்லை. இந்த சுதர்மத்தைச்
செய்யாமல் கோடி கோடியாய் திருப்பதி உண்டியலில் போட்டு வணங்கினாலும் அது
ஒருவருடைய கணக்கில் இறைவனால் வரவு வைத்துக் கொள்ளப்பட மாட்டாது.


சுதர்மத்தைப் பொறுத்த வரை இன்னொரு முக்கிய அம்சம், தேவையானதை தேவையான அளவே
செய்ய வேண்டும் என்பதே. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது இந்த
விஷயத்திற்கும் மிக நன்றாகவே பொருந்தும். மேலும் அளவுக்கு மீறி ஒன்றைச்
செய்கையில், செய்ய வேண்டிய இன்னொன்றில் குறைபாடு இருக்கவே செய்யும் அல்லவா?
சில நல்ல விஷயங்களே கூட தேவைக்கதிகமாக நீளும் போது அதன் விளைவுகள்
நன்மையானதாக இருப்பதில்லை. சில உதாரணங்களைப் பார்ப்போம்.


பிள்ளைகளைப் பாசத்துடன் வளர்க்க வேண்டும். இது ஒரு தந்தையின் தர்மம்.
ஆனால் திருதராஷ்டிரன் கண்மூடித்தனமான பாசத்தை பிள்ளைகளுக்குக் காட்டி
வளர்த்ததில் தீமையே விளைந்தது. பிள்ளைகள் மேல் உள்ள அளவு கடந்த பாசம் அவனை
உறுதியுடன் பிள்ளைகளின் தவறுகளைக் கண்டித்து திருத்த விடவில்லை. அது
கடைசியில் அவர்களுடைய அழிவுக்கே அல்லவா வழி வகுத்தது? திருதராஷ்டிரனும்,
காந்தாரியும் பிள்ளைகளுக்கு புத்தி சொல்லாமல் இல்லை. ஆனால் ஏதோ பேருக்கு
புத்தி சொன்னார்களே ஒழிய அதில் தேவையான அளவு ஆத்மார்த்தமான உறுதி
இருக்கவில்லை. புத்திமதிகளைக் கேட்காமல் போன போது ஆரம்பத்திலேயே தேவையான
அளவு கண்டிப்பாக அவர்கள் இருக்கவில்லை. எனவே வெளிப்பார்வைக்கு தங்கள்
கடமைகளைச் செய்வது போல காட்சி தந்தாலும், அதில் தேவையான விளைவை
ஏற்படுத்தும் அளவு உறுதி இல்லா விட்டால் அப்போதும் அது சுதர்மம் ஆகாது,
அதில் அதர்மமே விளையும் என்பது அனுபவம்.

(சில அறிஞர்கள்
திருதராஷ்டிரனை மனமாகவும், காந்தாரியை புத்தியாகவும் உருவகம்
செய்கிறார்கள். திருதராஷ்டிரன் இயல்பாகவே குருடன். காந்தாரியோ கணவன் காணாத
உலகத்தைத் தானும் காண விரும்பாமல் கண்களைக் கட்டிக் கொண்டாள். மனம்
விருப்பு வெறுப்புகளின் தன்மை உடையதால் உண்மையை அறிய முடியாத குருட்டுத்
தன்மை உடையது. அதை வழிநடத்த வேண்டிய புத்தியும் அதே போல குருடாகவே
மாறுமானால் அந்த இரண்டின் கூட்டணியில் உருவாகும் விளைவுகள் கௌரவர்கள் நூறு
பேரைப் போல மோசமானதாகவே இருக்கும் என்று மிக அழகாக வியாக்கியானம்
செய்கிறார்கள்.)

வாழ்க்கையில் தொடர்ந்து கிடைக்கும் ஒவ்வொரு
உறவிலும், வகிக்கும் ஒவ்வொரு பொறுப்பிலும் கூட அதனுடன் சில தார்மீகக்
கடமைகள் ஒரு மனிதனுக்கு வந்து சேர்கின்றன. அதுவும் சுதர்மத்தின் ஒரு
அங்கமே. அந்தக் கடமைகளை சரிவரச் செய்யா விட்டால் மற்ற விதத்தில் அந்த
மனிதன் எத்தனை மேன்மை படைத்தவனானாலும் சுதர்மம் தவறியவனாகிறான். அதற்கும்
மகாபாரதத்திலேயே ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். கர்ணனைப் போன்ற தர்மவான்
இல்லை. பகவான் கிருஷ்ணரே அவனிடம் கையை ஏந்தியும் இருக்கிறார். அவனிடம்
தர்மம் பெற்றும் இருக்கிறார். அந்த அளவு புண்ணியாத்மாவான கர்ணன் நண்பன்
துரியோதனன் தவறு செய்யும் போது சுட்டிக் காட்டி இடித்துரைக்காமல் கூட்டு
போனதை நண்பனாக சுதர்மம் தவறியதாகச் சொல்லலாம்.

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக் கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு.


என்கிறார் திருவள்ளுவர். இதில் “மேற்சென்று” என்ற சொல் பொருள் பொதிந்தது.
கருத்து கேட்டால் சொல்வேன் என்கிற நிலையை ஒரு நண்பன் எடுத்து விடக்
கூடாது. நண்பன் நெறி கடந்து செல்லும் போது தானாக வலியச் சென்று
இடித்துரைப்பது தான் உண்மையான நண்பனுக்கு அடையாளம். அவன் சொன்னால்
துரியோதனன் கேட்டிருப்பானா என்பது வேறு விஷயம். நியாயமற்ற செயல்களைச்
செய்தால் அழிவு நிச்சயம் என்பதால், நியாயமற்ற செயல்களைச் செய்யும் நண்பனைத்
திருத்த முற்படுவதன் மூலம் அவனை அழிவில் இருந்து காப்பாற்றி இருக்கலாம்
அல்லவா? இப்படி சுதர்மம் என்பது ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்து விட
முடிந்த சொல் அல்ல. சுதர்மம் என்பது விரிவான அர்த்தங்களைக் கொண்ட
நுணுக்கமான சொல்.

முன்பு சொன்னது போல அதிகமாகச் செய்தலும்
சுதர்மம் அல்லாத செயல். சில ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு வங்கித் தேர்வு
நடக்கும் மையத்திற்குச் செல்ல நேர்ந்தது. தேர்வு எழுத வந்த சுமார் 18 வயது
இருக்கக்கூடிய மாணவனுடன் அவன் தந்தையும் வந்திருந்தார். பேனா, ஹால்
டிக்கெட் முதற்கொண்டு அந்த தந்தையே தன் கையில் வைத்திருந்தார். எந்த
அறையில் அவன் தேர்வு எழுத வேண்டும் என்பதையும் அவரே சென்று தேடிக் கண்டு
பிடித்து அவனை அங்கு அவன் அமர வேண்டிய இருக்கையில் அமர்த்தி அந்தப் பேனா,
ஹால் டிக்கெட் இத்தியாதிகளை அவனிடம் கொடுத்து விட்டு வெளியே சென்றார்.
தேர்வு எழுதி முடித்து வரும் வரை அடிக்கடி மகனை எட்டிப் பார்த்துக் கொண்டே
இருந்தார். இந்த செயலைப் பார்த்து அந்த தந்தை தன் சுதர்மத்தைப் பின்
பற்றியிருக்கிறார், கடமையைச் செய்திருக்கிறார் என்று யாராவது சொல்ல
முடியுமா? கண்டிப்பாக முடியாது. அந்த மகனின் ஏழெட்டு வயதில், உண்மையிலேயே
அவர் மேற்பார்வையும் உதவியும் தேவைப்பட்டு இருக்கக்கூடிய காலத்தில், அவர்
இதைச் செய்திருப்பது அவர் கடமை . ஆனால் அவனுடைய 18 வயதில் அவர் இதைச்
செய்வது அவனுக்குத் தீமையே. அவனாகச் செய்ய வேண்டியவற்றை அவர் செய்து
அவனுடைய வளர்ச்சியை அவர் தடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அங்கு
கண்கூடாகப் பார்க்கும் போது எனக்கு வருத்தமாக இருந்தது.

சிலர்
தங்கள் வீட்டில் ஒரு துரும்பைக் கூட நகர்த்த உதவ மாட்டார்கள். ஆனால்
அடுத்தவர்கள் வீட்டில் ஓடாக உழைப்பார்கள். மற்றவர்கள் பாராட்டில்
புளங்காகிதம் அடைவார்கள். பரோபகாரிகள் என்று அவர்களைச் சொல்லலாமே ஒழிய
சுதர்மத்தை அனுசரிக்கிறவர்கள் என்று கூற முடியாது.

அது போல சில
விதமான உதவிகளும் தர்மமோ, சுதர்மமோ ஆகாதவை. எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில்
ஒருவர் அடிக்கடி கடன் தொல்லையில் மாட்டிக் கொள்வார். ஜப்தி, கைது நிலை
வரும் போது அவருடைய உடன் பிறந்தோர் எல்லாம் அவர் கடனை அடைத்து அவரைக்
கரையேற்றி விடுவார்கள். இது போல் பல தடவை நடந்ததை நான் பார்த்திருக்கிறேன்.
ஓரிரு முறை உதவியது உதவியாக இருக்கலாம். ஆனால் எப்படியும் இவர்கள் நமக்கு
உதவுவார்கள் என்ற நம்பிக்கையை அந்த நபரிடம் வளர்த்து விட்டு பொறுப்பற்ற
முறையில் வாழ வழி செய்த உதவிகளை எல்லாம் உடன் பிறந்தவர்களின் தர்மம்,
சுதர்மம் என்ற கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. கடைசியில் அவர்களும் உதவ
முடியாத நிலை ஏற்பட்டு அந்த நபர் சொல்லிக் கொள்ளாமல் ஒரு நாள் தலைமறைவாகிற
நிலை வந்து விட்டது.

எனவே சுதர்மம் என்ன என்பதில் நமக்கு
தெளிவில்லையானால் சுதர்மம் என்ற பெயரில் நம்மை நாம் ஏமாற்றிக் கொள்வதற்கு
அது காரணமாகி விடும். சுதர்மம் என்ற பெயரில் எத்தனையோ அனர்த்தங்களை நாம்
செய்ய நேர்ந்து விடும். நமது உள்நோக்கம் மட்டும் நன்றாக இருந்தால் போதாது.
அதன் விளைவுகளையும் யோசித்து உதவுவதும், செயல்படுவதும் முக்கியம். நம் உதவி
அடுத்தவர்களை சோம்பேறிகளாவும், பொறுப்பற்றவர்களாகவும் ஆக்குமானால் அது
கண்டிப்பாக சுதர்மம் அல்ல.

பகவான் கிருஷ்ணர் சொல்லும் சுதர்மம்
கண்மூடித்தனமானதல்ல. அது இதய பூர்வமானது. அறிவுபூர்வமானது. ஆக்கபூர்வமானது.
உலகில் ஒவ்வொருவரும் தங்கள் சுதர்மத்தை சரியாகக் கடைபிடிப்பார்களேயானால்
இந்த உலகம் ஒரு சொர்க்க பூமியாகி விடும் என்பதில் சந்தேகமேயில்லை.
logu
logu

Posts : 69
Join date : 01/08/2011

Back to top Go down

கீதை காட்டும் பாதை Empty Re: கீதை காட்டும் பாதை

Post by logu August 5th 2011, 20:14

அர்த்தம் அனர்த்தமாகும் தருணங்கள்!

சாங்கியம்
என்ற சொல்லிற்கு சாஸ்திரம் அல்லது தத்துவம் என்று பொருள் கொள்ளலாம்.
வாழ்க்கையின் தத்துவங்களை நடைமுறைக்குக் கொண்டு வரும் வழிகள் அனைத்தையும்
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கீதையின் இரண்டாம் அத்தியாயமான “சாங்கிய யோகத்தில்”
தொட்டு விடுகிறார். பின்வரும் மற்ற அத்தியாயங்களில் விளக்கமாக சொல்லப்படும்
அம்சங்களும் இந்த சாங்கிய யோகத்தில் சுருக்கமாக சொல்லப்பட்டு விடுகின்றன.


சுதர்மம் பற்றி விளக்கிய ஸ்ரீகிருஷ்ணர் அடுத்ததாக கர்மத்தின் அல்லது
செயலின் சூட்சுமத்தை விளக்க முற்படுகையில் ஆரம்பத்திலேயே சொல்லும்
வார்த்தைகள் அவை சொல்லப்பட்ட காலத்தை எண்ணிப் பார்க்கையில் புரட்சிகரமானவை
என்றே சொல்ல வேண்டும்.

“அறிவிலிகள் வேதங்களின் மேலெழுந்த வாரியான
அர்த்தம் கொண்டு அதைத் தவிர வேறொன்றும் இல்லையென்று சாதிக்கின்றனர்.
இவர்கள் சொர்க்கத்தையே லட்சியமாகக் கொண்டு கோஷம் செய்கிறார்கள். இவர்கள்
போகத்திற்கும், அதிகாரத்திற்கும் வேண்டி சடங்குகள் செய்கிறார்கள்.
அவற்றினால் அவர்கள் புத்தி மழுங்கி விடுகிறது. எனவே மகோன்னதமான
லட்சியத்திற்கு வேண்டிய நிச்சயமான புத்தி அவர்களிடம் இல்லாமல் போய்
விடுகிறது”

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், வேதங்களே எல்லாம்
என்று முழுமையாக நம்பப்பட்டும், பின்பற்றப்பட்டும் வந்த கால கட்டத்திலேயே
ஸ்ரீகிருஷ்ணர் வேதங்களை மேலெழுந்தவாரியாக புரிந்து கொள்வதையும், சடங்குகள்
சம்பிரதாயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதையும் உறுதியான வார்த்தைகளால்
சாடுகிறார்.

இது இக்கால மனிதர்கள் கவனித்து தெளிவடைய வேண்டிய
ஒரு விஷயம். எந்த மதமானாலும் அந்த மத புனித நூல்களை மேலெழுந்த வாரியாகப்
படித்து அரைகுறையாய் புரிந்து கொள்வதால் தீமையே விளையும் என்பதற்கு
மதங்களின் பெயரால் இக்கால ஆன்மிகவாதிகள் செய்யும் குளறுபடிகளும், சண்டை
சச்சரவுகளுமே நல்ல உதாரணம்.

மதங்கள் மனிதனை உயர் நிலைக்கு
உயர்த்தும் நோக்கத்திலேயே உருவாக்கப் படுபவை. உருவாக்கியவர்களின் நோக்கம்
உயர்ந்ததே. மத உபதேசங்களில் பலவும் அந்தந்த கால கட்டங்களின் அப்போதைய
சூழ்நிலைகளிற்கும், தேவைகளுக்கும் ஏற்பவே இருந்தன. ஆரம்பத்தில் மிகத்
தூய்மையாகவும், உருவாக்கப்பட்ட நோக்கங்களில் இருந்து தடம் மாறாமலும் இருந்த
மதங்களின் உபதேசங்கள் காலம் செல்லச் செல்ல சிறு சிறு மாறுதல்களை அடைய
ஆரம்பிக்கின்றன. பிற்காலத்திய மனிதர்களின் சொந்தக் கருத்துகள் மற்றும்
நிலைப்பாடுகள் அந்த உபதேசங்களில் இடைச்செருகல்களாகும் வாய்ப்புகள் மிக
அதிகம். அதுவும் வாய் மொழிகள் வழியாகவே உபதேசங்கள் செய்யப்பட்ட
பழங்காலத்தில் இதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

மேலும்
உபதேசங்கள் செய்யப்பட்ட ஆரம்ப மொழி பெரும்பாலான மதங்களில் இக்கால மொழியாக
இல்லை. அந்த மொழியில் இருந்து பல மொழிகள் வழியாக மொழி பெயர்க்கப்பட்டு
இக்காலத்தில் நாம் அறியப்படும் புனித உபதேசங்கள் எந்த அளவுக்கு அதன்
ஆரம்பத் தூய்மை மாறாமல் இருக்கின்றன என்பது சர்ச்சைக்குரியதே.


ஒருவரைப் பற்றி இன்னொருவர் சொன்ன கருத்துகளை அட்சரம் மாறாமல் அப்படியே
திருப்பிச் சொன்னாலும் குரலின் ஏற்ற இறக்கங்களை மாற்றினால் முதலில்
சொன்னதற்கு நேர் எதிர்மாறான அபிப்பிராயத்தை மற்றவர்கள் மனதில் ஏற்படுத்தி
விட முடியும். பலருக்கிடையில் கலகம் மூட்டி விடும் இந்தக் கலையில்
வல்லுனர்கள் பலரையும் நாம் சர்வ சாதாரணமாக நம்மிடையே பார்க்கலாம்.


இப்படியெல்லாம் இருக்கையில் எந்த மத புனித நூலாக இருந்தாலும் அதை மிக
ஆழமாகப் படித்தால் மட்டுமே சொல்லப்பட்டவற்றின் நோக்கத்தையும், உண்மையான
அர்த்தத்தையும் ஒருவரால் அறிந்து கொள்ள முடியும். அப்படி ஆழமாகச்
செல்பவருக்கே அன்னப்பறவை நீரையும், பாலையும் பிரித்து பாலை மட்டுமே
உட்கொள்வது போல் படிக்கின்ற விஷயங்களில் இருந்து உண்மையைப் பிரித்து அறிய
முடியும். எனவே அந்த நூலில் இருந்து அங்கொரு பகுதி, இங்கொரு பகுதியைப்
படித்துக் கொண்டு அதை முழுவதுமாக அறிந்து கொண்டு விட்டதாக ஒருவர் நினைப்பது
பேதைமையே.


அரைகுறையாக அறிந்தவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணர்
சொல்வது போல சொர்க்கம், அதிகாரம், போகம் போன்றவையே குறிக்கோளாக அமைகிறது.
அதை அடையும் வழிகளாக அந்த புனித நூல்களில் சொல்லப்படும் சடங்குகள்,
சம்பிரதாயங்களை எல்லாம் மிக முக்கியமாக எடுத்துக் கொள்கின்றனர். எந்த
மதத்திலும் உண்மையான சாரத்தை அறிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாக சடங்குகள்,
சம்பிரதாயங்களையே பிரதானமாக எடுத்துக் கொள்வது சாரத்தை விட்டு சக்கையை
முக்கியமாக எடுத்துக் கொள்வது போன்றது தான். அப்படிக் கண்மூடித்தனமாகச்
செய்தால் புத்தி மழுங்கி விடும் என்று ஸ்ரீகிருஷ்ணர் எச்சரிக்கிறார்.
புத்தி மழுங்கும் போது மேன்மையான செயல்கள் செய்யத் தேவையான தெளிவோ, உறுதியோ
இருப்பதில்லை என்கிறார் அவர்.

ஸ்ரீகிருஷ்ணர் எதையும்
சிந்திக்காமல் அப்படியே பின்பற்றுவதை ஊக்குவிக்கவில்லை. பகவத் கீதை
முழுவதும் அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணரை பல கேள்விகள் கேட்கிறான். அப்போது அப்படி
சொன்னாய், இப்போது இப்படி சொல்கிறாய், குழப்புகிறாய் என்றெல்லாம்
சொல்கிறான். ஸ்ரீகிருஷ்ணர் அது போன்ற கேள்விகளை அனுமதிக்கவே செய்கிறார்.
நான் கடவுள், எல்லாம் அறிந்தவன், அதனால் நான் சொல்கிறபடி நீ கேட்டு நட என்ற
ரீதியில் அவருடைய உபதேசம் இல்லாததும், ஒரு விஷயத்தை அனைத்து கோணங்களில்
இருந்து பார்த்து தெளிவடைய வைக்கும் விதமாய் உபதேசம் இருப்பதுமே கீதையின்
மிகப்பெரிய சிறப்பம்சம்.

சடங்குகள் சம்பிரதாயங்கள் எல்லாம்
ஆரம்பத்தில் மனிதனை நன்னெறிப்படுத்தவே உருவாக்கப்பட்டவை. அவை
உருவாக்கப்பட்ட கால சூழ்நிலைகளின் தேவைகளும், தாக்கங்களும் அவற்றில்
இருக்கக் கூடும். அவற்றில் சில மாறி விட்ட இக்காலத்திற்குப்
பொருத்தமற்றதாகக் கூட இருக்கலாம். அவற்றின் நோக்கம் என்ன என்ற ஆழமான அறிவு
இருந்தால் மட்டுமே இக்காலத்திற்கும் பொருந்துவனவற்றை தேர்ந்தெடுத்துப்
பின்பற்றி பலனடைய முடியும்.

மேலும் சடங்குகள், சம்பிரதாயங்கள்
போன்றவை ஓர் இலக்கை எட்ட உதவும் வாகனங்கள் போன்றவை. அவை இலக்கை விட
எப்போதுமே முக்கியமானதாகி விடக்கூடாது. இலக்கை அடைந்த பிறகு அவற்றின்
பயனும் இல்லாமல் போய் விடுகிறது. கரையை அடைந்த பின்னும் படகை யாரும்
தங்களுடன் எடுத்துச் செல்வதில்லை. கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் இன்னொரு அழகான
உவமையைக் கூறுகிறார். “நாலா புறமும் தண்ணீர் இருக்கையில் கிணற்றின் பயன்
எப்படியோ, அதே அளவு பயன் தான் உண்மையை உணர்ந்தவனுக்கு வேதச்
சடங்குகளாலும்”.

இன்றைய காலத்தில் மதங்கள் மற்றும் புனித
நூல்களின் முக்கிய நோக்கத்தை மறந்து விடுகிறார்கள். சடங்குகள் சட்டங்கள்
போல கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை போன்று சித்தரிக்கிறார்கள்.
இல்லாவிட்டால் நரகத்தை அடைய நேரிடும் அல்லது துயரம் சம்பவிக்கும் என்கிற
பயம், சடங்குகளை செய்தால் சொர்க்கம் கிடைக்கும் அல்லது அதிர்ஷ்டம் அடைவோம்
என்கிற ஆசை தான் பெரும்பாலான மக்களின் இன்றைய ஆன்மிகத்திற்கான காரணம் ஆகி
விடுகிறது. ஸ்ரீகிருஷ்ணர் இந்த அணுகுமுறையை புத்தி மழுங்க வைக்கும்
முட்டாள்தனம் என்கிறார்.

வெறுமனே வேதங்களைப் படித்து
வைத்திருப்பதும், மனப்பாடம் செய்து சொல்ல முடிவதும் அக்காலத்திலேயே
மதிக்கப்பட வேண்டிய ஒரு தகுதியாகக் கருதப்படவில்லை. இதற்கு மஹாபாரதத்திலேயே
பல உதாரணங்கள் இருக்கின்றன. கௌசிகன் என்ற பிராமணன் வேதங்களை நன்கு
படித்தறிந்தவன். பிரம்மச்சரிய விரதம் இருந்து பல சக்திகளையும் பெற்றவன்.
அப்படிப்பட்டவன் தர்மவியாதன் என்பவரிடம் உபதேசம் பெற அனுப்பி வைக்கப்
படுகிறான். தர்மவியாதன் ஆசிரமம் ஒன்றில் வசிக்கும் முனிவராக இருக்கக்கூடும்
என்று எண்ணி கௌசிகன் தேடிப் போனால் அந்த நபர் ஒரு கசாப்புக் கடைக்காரனாக
இருப்பதைக் கண்டு அவன் திடுக்கிட நேர்கிறது. இறைச்சி விற்பவனாக இருந்தாலும்
தர்மவியாதன் தான் செய்கின்ற தொழிலில் நியாயமானவனாகவும், தாய் தந்தைக்கு
சிரத்தையுடன் சேவை செய்கிறவனாகவும், தர்மம் அறிந்தவனாகவும் இருந்ததால்
கௌசிகன் என்ற பிராமணனுக்கு உபதேசம் செய்யும் தகுதியைப் பெற்று விடுகிறான்.


அதே போல சாண்டோக்கிய உபநிடதத்தில் உத்தாலகர் என்பவர் தன் மகன்
ஸ்வேதகேதுவை உண்மையான ஞானம் பெற்று வர ஒரு குருவிடம் அனுப்புகிறார்.
ஸ்வேதகேது அறிவில் சிறந்தவனாக இருந்ததால் விரைவில் வேதங்கள் அனைத்தும்
கற்று தேர்ந்து விடுகிறான். இனி படிக்க எதுவும் இல்லை என்கிற அளவு கற்று
முடிந்தவுடன் அவன் தந்தையிடம் திரும்புகிறான். அவன் வரும் போதே அவனிடம்
வேதங்கள் அனைத்தையும் கற்ற கர்வம் தென்படுவதை உத்தாலகர் கவனித்து
துக்கத்தில் ஆழ்கிறார்.

எங்கே கர்வம் இருக்கிறதோ அங்கே ஞானம்
இல்லை என்றல்லவா அர்த்தம்? நெல்மணிகளைத் தாங்கும் வரை பணியாமல் நேராக
நிற்கும் கதிர் நெல்மணிகளைப் பெற்றவுடன் தானாகத் தலைவணங்குவது போல உண்மையான
ஞானம் பெற்றவனிடம் தாழ்மையும் எளிமையும் தானாக அல்லவா வந்து விட வேண்டும்?


வேதங்களைக் கரைத்துக் குடித்த மகனாக திரும்பி வந்தும் ஆனந்தமடைவதற்கு
பதிலாக தந்தை துக்கமாக இருக்கிறாரே என்று வருந்திய ஸ்வேதகேது காரணம்
கேட்டறிந்து பின் மீண்டும் ஆழமாகப் பொருளுணர்ந்து கற்று ஞானியாக மாறுவதாகச்
செல்கிறது கதை.

ஆகவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வெறும்
புனித நூலறிவு பெறுவதை உண்மையான ஞானம் என்று எடுத்துக் கொள்ளும்
முட்டாள்தனம் நம் முன்னோரிடம் இருக்கவில்லை. ஆனால் அந்த முட்டாள்தனம்
இன்றைய மக்களிடம் அதிகம் இருப்பதால் தான் ஆன்மிக மோசடிகள் அதிகமாக
நடக்கின்றன. ஞானத்தை விட சடங்குகள் முக்கியத்துவம் பெறுவதால் தான் இன்றைய
பெரும்பாலான மக்களின் ஆன்மிகம் அறிவு சார்ந்ததாக இருப்பதில்லை. இந்த
உண்மையை ஸ்ரீகிருஷ்ணரின் மேற்கண்ட சுலோகங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன.

இனி கீதையில் மிக முக்கியமான அம்சமான கர்மயோக இரகசியத்தைப் பார்ப்போம்.
logu
logu

Posts : 69
Join date : 01/08/2011

Back to top Go down

கீதை காட்டும் பாதை Empty Re: கீதை காட்டும் பாதை

Post by logu August 5th 2011, 20:14

உயர்ந்த செயலின் ரகசியம்

கர்ம யோகத்தைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கையிலேயே ஸ்ரீகிருஷ்ணர் முரண்பாடாகத் தோன்றும் உபதேசத்தை அர்ஜுனனிற்குச் செய்கிறார்.


“செயல்புரிவதற்கு மட்டுமே உனக்கு உரிமை உண்டு. அதன் லாப நஷ்டங்கள்
உன்னைச் சேர்ந்தவை அல்ல. அதன் பலனை அடைய வேண்டும் என்று எண்ணாதே. செயல்
புரிவதையும் தவிர்க்காதே.

தனஞ்செயா (அர்ஜுனனின் இன்னொரு பெயர்),
பற்றின்றியும் யோகத்தில் உறுதியுடனும் வெற்றி தோல்விகளை சமமெனக் கருதியும்
செயல் புரிவாயாக. யோகம் என்பது அத்தகைய சமத்துவ நிலையே.


தனஞ்செயா, செயல் பற்றற்ற செயலை விடத் தாழ்ந்தது. ஆகையால் பற்றற்ற நிலையையே
தஞ்சமாகக் கொள். பலனைத் தங்களது நோக்கமாகக் கொண்டவர்கள் நிலை பரிதாபகரமானது


பற்றற்ற ஞானிகள் செயலின் பலனைத் துறப்பதன் மூலம் பிறவியாகிய
பந்தத்திலிருந்து விடுதலை பெற்று எல்லாத் துன்பங்களிலிருந்தும் கடந்த ஆனந்த
நிலையை அடைகின்றனர்”

ஒரு செயலை செய்ய முற்படுவதே ஒரு
குறிப்பிட்ட பலனை அடைவதற்காகத் தானே, பலனைப் பற்றியே நினைக்காமல் செயல்
புரிய ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறாரே, இது முரண்பாடாகத் தோன்றுகிறதே என்ற
சந்தேகம் வருவது இயற்கை. ஆனால் ஆழமாக சிந்தித்தால் இதில் முரண்பாடில்லை
என்பதும் ஒரு சிறப்பான செயல் ரகசியத்தைத் தான் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்
என்பது விளங்கும்.

ஒவ்வொரு செயலும் விளைவிலேயே முடிகிறது.
விளைவில்லாத செயல் என்று உலகத்தில் எதுவுமே இல்லை. அதனால் செயலிலேயே
விளைவும் மறைந்து இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அதனால் எதை எப்படிச்
செய்கிறோம் என்பதைப் பொறுத்து அதற்கேற்ற பலன் சரியான காலத்தில் தானாக வரும்
என்பதால் பலனைப் பற்றி கவலைப்பட அவசியமில்லை. விதைத்தது அவரை என்றால்
விளைவது துவரையாக முடியாது. எனவே அவரை விதைத்தவன் என்ன பயிர் விளையும் என்ற
கவலையில் ஆழ்வது அர்த்தமற்றது.


ஒரு செயல் வெகு சிறப்பாக
இருக்க வேண்டுமானால் செயலைச் செய்பவனுடைய முழு மனதும் அந்தச் செயலிலேயே
இருத்தல் வேண்டும். பலனில் பற்று வைப்பது என்பது தேவையில்லாத கனவுகளையும்,
கவலைகளையும், பயங்களையும், பரபரப்புகளையும் தூண்டி விடக் கூடியது. அது
போன்ற பலன் குறித்த உணர்வுகள் ஒருவனை நூறு சதவீத கவனத்தோடு, மன
ஐக்கியத்தோடு அந்த செயலைச் செய்ய அனுமதிக்க மாட்டா. உதாரணத்திற்கு சுமார்
இருபது சதவீத கவனம் பலன் குறித்த உணர்வுகளில் தங்கி விடுமானால் நமது செயல்
திறத்திற்குத் தேவையான கவனத்தில் 20 சதவீதம் குறைந்து அதற்கேற்ப அவனது
ஆற்றலும், அறிவுக்கூர்மையும் குறைந்து அதனால் ஏற்படும் குறைபாடு அந்த
செயலில் கண்டிப்பாக இருந்தே தீருமல்லவா?

ஒருசில சமயங்களில்
பலன் குறித்த அதீத கவலைகளும் சந்தேகங்களும் ஒட்டு மொத்த செயலையுமே
ஸ்தம்பிக்க வைத்து விடுவதும் உண்டு. சில மாணவர்கள் மிக நன்றாகப்
படித்திருந்தாலும் தேர்வு எழுதும் சமயத்தில் அனைத்தும் மறந்து போய்
சூன்யமாகி விடுவதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

மனிதனால்
பயன்படுத்த முடிந்த காலம் நிகழ்காலமே. எனவே வாழ்க்கையை முழுமையாக வாழ
விரும்புபவன், நிறைய சாதிக்க விரும்புபவன் நிகழ்காலத்தை அலட்சியம் செய்து
விட முடியாது. அவன் செயல் புரிகையில் பலன் பற்றிய எண்ணங்கள் அவன் மனதை
ஆக்கிரமிக்குமானால் அவன் கவனம் பலன் கிடைக்கக் கூடிய எதிர்காலத்திற்குப்
போய் விடுவதன் மூலம் நிகழ்காலத்தை தவறவே விடுகிறான். நிகழ்காலத்தைத் தவற
விடும் போது எதிர்கால நலனையும் சேர்த்தே அவன் இழக்கிறான். மாறாக
நிகழ்காலத்தில் முழுக் கவனம் வைத்து செய்ய வேண்டியதைக் குறைவில்லாமல்
செய்வானேயானால் அதன் மூலமாக எதிர்கால நலனும் அவனுக்கு உறுதியாகிறது.


ஒரு செயலைச் செய்கையில் மற்ற அனைத்தையும் மறந்து அந்த செயலிலேயே
ஐக்கியமாகி விட்டால் அந்த செயல் பரிபூரணமாகவும், மிகச் சிறப்பாகவும்
அமைந்து விடும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு கலைஞன் தன் கலையில் தன்னை
மறந்து ஐக்கியமாகி விடுகையில் உருவாகும் படைப்புகள் காலத்தை வென்று
நிலைத்து நின்று விடுகின்றன. படைக்கின்ற நேரத்தில் அவனுக்கு கிடைக்கக்
கூடிய கைதட்டல்கள் பற்றிய எண்ணமோ, மற்றவர்கள் இதை எப்படி விமரிசிப்பார்கள்
என்ற சந்தேகமோ அவனுக்கு ஏற்பட்டால் நிச்சயமாக அந்த படைப்பின் தரத்தை அது
பாதிக்காமல் இருக்காது. அது ஒரு உன்னதப் படைப்பாக இருக்காது.



அஜந்தா ஓவியங்களும், எல்லோரா சிற்பங்களும், வேதங்களும், உபநிடதங்களும்
காலத்தை வென்று நிலைத்து நிற்கக் காரணம் அவற்றை எல்லாம் படைத்தவர்கள் எந்த
பாராட்டையும், பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்
கூறியது போல தங்கள் பணிகளைச் செய்தது தான். இவை எவற்றிலும் அதைப்
படைத்தவர்கள் பெயர் இல்லை. எதிர்காலம் எங்கள் பெயரை நினைவு வைத்திருக்க
வேண்டும் என்கிற எண்ணம் அஜந்தா ஓவியங்களை வரைந்த ஓவியர்களோ, எல்லோரா
சிற்பங்களை வடித்த சிற்பிகளுக்கோ, வேத உபநிடதங்களைப் பாடிய முனிவர்களுக்கோ
இருக்கவில்லை. அவர்கள் படைப்புகள் பரிபூரணமாக வந்திருக்கின்றன என்கிற ஆத்ம
திருப்தி மட்டும் அவர்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கிறது. ஆனால் சிறிய
செயலுக்கும் பெரிய விளம்பரம் தேடும் இன்றைய உலகில் அந்த மகத்தானவர்களைப்
புரிந்து கொள்வது கஷ்டமே!

அந்த அமரத்துவ படைப்புகளைப் படைப்பதில்
அவர்கள் சிரமங்கள் எத்தனையோ பட்டிருக்கலாம். அத்தனை சிரமங்களும் அந்த
படைப்புகள் முழுமையாக அழகுடன் முடிந்த போது அவர்களால் மறக்கப்பட்டு
இருக்கும். எத்தனை கஷ்டப்பட்டோம் என்று அவர்கள் சோகக் கதைகளை அந்த
படைப்புகளுடன் குறிப்பிட்டு எழுதி வைத்து விட்டுப் போகவில்லை.


அஜந்தா ஓவியங்கள் சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் முற்பட்டவை.
குதிரை லாட உருவில் அமைந்திருந்த 31 அஜந்தா குகைகளும் உள்ளே கும்மிருட்டு
கொண்டவை. பெரிய பெரிய கண்ணாடிகள் மூலம் சூரிய வெளிச்சத்தை உள்ளனுப்பி அந்த
வெளிச்சத்தில் இயற்கையாக உருவாக்கிய நிற மைகளால் புத்த பிக்குகள் பிரமிக்க
வைக்கும் ஓவியங்களை வரைந்துள்ளனர். தரையைத் தவிர சுவர்கள், கூரை
எல்லாவற்றிலும் வியக்க வைக்கும் நுட்பத்துடன் வரைந்த அந்த ஓவியங்கள்
ஒன்றிலும் கூட முன்பு குறிப்பிட்டது போல வரைந்தவர்கள் தங்கள் பெயர்களைக்
குறிப்பிடவில்லை. (காலப் போக்கில் அந்த குகைகளைச் சுற்றி காடுகள் வளர்ந்து
மறைந்து கிடந்த அந்த குகைகள் 1819 ஆம் ஆண்டு ஜான் ஸ்மித் என்ற ஆங்கிலேய
அதிகாரி வேட்டைக்கு வந்த இடத்தில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டன.
பின்னர் தான் அந்த அஜந்தா ஓவியங்களின் புகழ் உலகமெங்கும் பரவ ஆரம்பித்தன.
பின் பார்க்கப் போன நம் மக்கள் அந்த ஓவியங்களுக்கு கீழ் தாங்கள் வந்து
விட்டுப் போன தடயமாக தங்கள் பெயர்களை கிறுக்கி விட்டு வந்திருக்கிறார்கள்.
இப்போதெல்லாம் அந்த ஓவியங்களுக்கு இரண்டடி தள்ளியே நின்று தான்
பார்க்கிறபடி தடுப்பு வைத்து இப்படி பெயர் எழுதும் ஆசாமிகளைக்
கட்டுப்படுத்தி இருக்கிறார்கள்).

ஒருசில சமயங்களில் செயல்களுக்கு
எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் இருக்கலாம். அவை நம் அறிவுக்கெட்டா
விட்டாலும் தகுந்த காரணங்களாலேயே தான் இருக்கும். ஆனாலும் கூட அதுகுறித்த
கவலையோ, பதட்டமோ அந்த நிலையை மாற்றி விடப் போவதில்லை. எனவே தான் பலனைக்
குறித்த சிந்தனையை செயல் புரியும் சமயத்தில் அப்புறப்படுத்தி விட
அறிவுறுத்துகிறார் ஸ்ரீகிருஷ்ணர். பற்றுடைய செயல் வெறும் செயலாக
இருக்கையில் பற்றற்ற செயல் யோக நிலைக்கு உயர்த்தப்படுகிறது.

ஒரு
செயலைப் பிரமாதமாகச் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதனைப் பலரும்
பாராட்டக் கூடும். நீங்கள் கைதட்டல் பெறக்கூடும். ஆனால் அடுத்து இதே போன்று
இன்னொரு செயலை அருமையாகச் செய்யும் போது பாராட்டோ, கைதட்டல்களோ சிறிது
குறைந்து போனால் கூட அது உங்களை வெகுவாக பாதிக்கும். அதன் விளைவு நீங்கள்
செய்யப் போகிற அடுத்த செயல்களையும் பாதிக்கும். பாராட்டு, புகழ்
கிடைப்பதற்கேற்ற படி உங்கள் செயல்களை மாற்றிக் கொள்ள வைக்கும். உங்கள்
திறமைக்கும் தனித்துவத்துக்கும் பாராட்டுகள் வாங்கியது போய் பாராட்டுக்கும்
கைதட்டல்களுக்கும் வேண்டி நீங்கள் செயல்களையும் தனித்துவத்தையும் மாற்றிக்
கொண்டு சோரம் போக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக நேரிடும். இதை இன்றைய
காலகட்டத்தில் நாம் நிறையவே காண முடியும். எனவே தான் பலன் மீது அதீத அக்கறை
வைப்பவர்கள் நிலை பரிதாபகரமானது என்று ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்.


கர்மயோகம் குறிக்கோளில்லாமல் இருக்கச் சொல்லவில்லை. அர்த்தமில்லாமல்
செயல் புரியச் சொல்லவில்லை. செய்யும் செயலை விட்டேற்றியாகச் செய்யச்
சொல்லவில்லை. சிறப்பாகச் செய்து முடித்த ஆத்மதிருப்தியை இழந்து விடச்
சொல்லவில்லை. செயலில் கிடைக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்களை இழந்து விடச்
சொல்லவில்லை.

மாறாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதிலும்
எப்படிச் செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கச் சொல்கிறது. நம்மை
செய்யும் செயலில் முழுமையாக ஈடுபடச் சொல்கிறது. செயலில் கீழ், மேல் என்ற
பாகுபாடுகள் இல்லை என்று சொல்கிறது. பலன், புகழ், கவலை, பயம் என்று நமது
சக்திகளை வீணடிக்காமல் செய்யும் செயலில் கண்ணாயிருக்கச் சொல்கிறது. பலன்
தானாக வரும் என்கிறது கீதை.


குரானில் ஒரு வாசகம் வருகிறது.
“என்னுடைய ஊதியம் அல்லா ஒருவருடைய பொறுப்பேயாகும்” (குரான் 10 – 72). பலன்
தருபவன் இறைவன். இறைவன் தக்க சமயத்தில் எல்லாவற்றிற்கும் பலனைத் தந்து
கணக்கை சரி செய்யாமல் இருப்பதில்லை. பலன் கிடைக்காமல் ஏமாந்து விடுவோமோ
என்கிற எண்ணம் எப்போதும் தேவையில்லை.

மேலும் வெளிப்படையான
பார்வைக்குத் தெரிவதைப் போலவே செயலையும், விளைவையும் எடுத்துக் கொள்வது
புத்திசாலித்தனமாகாது. மகாதேவ தேசாய் கூறுவார்: “செயலையோ அதன் விளைவையோ
வெளிப்படையான அறிகுறிகளை வைத்து முடிவுகட்டி விடலாகாது. இதை நாம் நினைவில்
வைக்க வேண்டும். இம்மியளவும் பிசகாத இந்த அபூர்வத் தராசைக் கொண்டு
நிருப்பது கடவுளின் கையில் தான் இருக்கிறது”.

எனவே செய்ய
வேண்டியதை முழு மனதோடு முறையாகச் செய்யுங்கள். அத்துடன் உங்கள் வேலை
முடிந்தது. பலன் தரும் வேலை இறைவனைச் சார்ந்தது. அந்த வேலையை அவனிடமே
விட்டு விட்டு நீங்கள் நிம்மதியாக இருங்கள். இப்படிச் செய்வதன் மூலம்
இந்தப் பிறவிப் பெருங்கடலை எந்தக் கவலையும் இன்றி ஆனந்தமாகக் கடந்து
செல்லலாம் என்கிறது கீதை.

(கர்ம யோகம் அத்தியாயம் வரும் போது இதைக் குறித்து மேலும் விளக்கமாகப் பார்ப்போம்.)


தன் ஆரம்ப துக்கத்தையும், குழப்பத்தையும் மறந்து ஸ்ரீகிருஷ்ணரின்
உபதேசத்தில் லயித்துப் போயிருந்த அர்ஜுனன் அடுத்ததாக ஒரு முக்கியக்
கேள்வியைக் கேட்டான். அந்தக் கேள்விக்குப் பதிலாக பகவான் தொடர்ந்து சொன்ன
18 சுலோகங்கங்களில் கீதையின் முழுமுக்கிய சாராம்சத்தையே அடக்கி விடுகிறார்.
அர்ஜுனன் கேள்வியையும், ஸ்ரீகிருஷ்ணர் பதிலையும் இனி பார்ப்போமா?
logu
logu

Posts : 69
Join date : 01/08/2011

Back to top Go down

கீதை காட்டும் பாதை Empty Re: கீதை காட்டும் பாதை

Post by logu August 5th 2011, 20:15

நிலைத்த அறிவுடையவன் யார்?


வாழ்க்கையின் முக்கியத் தத்துவங்களை சாங்கிய யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர்
சொல்லக் கேட்ட அர்ஜுனனிற்கு தன்னுடைய தற்போதைய நிலை, இருக்கும் இடம்
எல்லாம் மறந்தே போய் விட்டது. உண்மையை முழுமையாக அறியும் ஆர்வத்தினால்
தன்னை மறந்து போன அவன் இந்த வாழ்க்கைத் தத்துவங்களை எல்லாம் முழுமையாகக்
கடைப்பிடிக்கிற மனிதன்-ஸ்திதப்ரக்ஞன் (நிலைத்த அறிவு உடையவன்)- எப்படி
இருப்பான், எப்படி நடந்து கொள்வான், எப்படி வாழ்வான் என்றறிய ஆசைப்பட்டான்.
தத்ரூபமாக அப்படிப் பட்ட மனிதனை விவரிக்கும் படி ஸ்ரீகிருஷ்ணரைக்
கேட்டான்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் லட்சிய மனிதனான ஸ்திதப்ரக்ஞனை
அடுத்த பதினெட்டு சுலோகங்களில் விவரிக்க ஆரம்பித்தார். இந்த 18
சுலோகங்களில் கீதையின் 18 அத்தியாயங்களின் சாராம்சமே விளக்கப்பட்டு விட்டது
என்று கூட சொல்லலாம். மகாத்மா காந்தி வாழ்ந்த காலத்தில் அவருடைய
ஆசிரமத்திலும், அவருடைய நெறிகளை முழுமையாகப் பின்பற்றிய பலர் வீடுகளிலும்
இந்த 18 சுலோகங்களும் மாலை நேரத்துப் பிரார்த்தனையின் போது ஓதும் வழக்கம்
பின்பற்றப்பட்டு வந்தது. தினமும் இந்த சுலோகங்களைப் படிப்பதோடு அவற்றின்
பொருளை சிந்திக்கவும் செய்தால் அவை கண்டிப்பாக மனிதனை உயர்வழியில்
நெறிப்படுத்தும் என்று அவர்கள் நம்பினார்கள்.

முதலில் நிலைத்த அறிவுடையவன் யார் என்று ஸ்ரீகிருஷ்ணர் விவரிக்கிறார்.


“பார்த்தா (அர்ஜுனனின் பல பெயர்களில் இதுவும் ஒன்று), ஒரு மனிதன் மனதில்
எழும் ஆசைகளை எல்லாம் உதறித் தள்ளி விட்டு தன் ஆன்மாவிலேயே ஆனந்தம்
அடைவானாயின் அவனே ஸ்திதப்ரக்ஞன் எனப்படுகிறான்

துக்கங்களைக்
கண்டு யாருடைய மனம் கலங்கவில்லையோ, யார் இன்பங்களுக்காக ஏங்கவில்லையோ,
இச்சை, பயம், கோபம் இவற்றிலிருந்து யார் விடுபட்டிருக்கிறானோ அவனே உறுதியான
அறிவுடையவன்.

எவனுக்கு எதிலும் பற்று இல்லையோ, தனக்கு நன்மைகள்
ஏற்படுகையில் மகிழ்ச்சியோ, தீமை விளைகையில் கோபமோ இராமல் எவன் உள்ளானோ
அவனது புத்தியே உறுதியானது.

ஆமை எல்லாப் பக்கங்களிலிருந்தும் தன்
உறுப்புகளை உள்ளே இழுத்துக் கொள்வதைப் போல் ஒருவன் தனது புலன்களை வெளிப்
பொருள்களில் இருந்து உள்ளடக்கிக் கொள்ளும் போது அவன் புத்தி உறுதியான
நிலையை அடைகிறது.

ஒரு மனிதன் புலன்களைப் பட்டினி போடுகையில்
புலன்களுக்கான சாதனங்கள் அவனிடமிருந்து விலகி விடுகின்றன. ஆனால் அவற்றின்
மேல் உள்ள ஆசை மறைந்து விடுவதில்லை. ஆனால் பரம்பொருளைக் கண்டவுடன் அந்த
ஆசையும் மறைந்து விடுகிறது.

கௌந்தேயா (இதுவும் அர்ஜுனன் பெயர்),
விவேகம் உள்ளவன் எவ்வளவோ முயற்சி செய்தாலும் கூட அடங்காப் பிடாரியான
புலன்கள் பலாத்காரமாக மனதைத் தடுமாறச் செய்து விடுகின்றன.

அவற்றை
எல்லாம் நன்றாக அடக்கி யோகத்தில் அமர்ந்தவனாக என்னையே அடைக்கலமாகக் கொண்டு
புலன்களை வசப்படுத்தி வைத்திருப்பவன் எவனோ அவனது அறிவே நிலையானது”


இந்த சுலோகங்களில் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்திதப்ரக்ஞனின் மூன்று முக்கிய குணாதிசயங்களை விவரிக்கிறார்.

1) ஆசைகளைத் துறத்தல்
2) இன்ப துன்பங்களால் பாதிக்கப்படாதிருத்தல்
3) புலன்களை அடக்கி கட்டுப்பாட்டில் வைத்தல்


1.ஆசைகளைத் துறத்தல்:


ஆனந்தத்தை வெளியே தேடுவது தான் மனிதனுடைய துக்கத்தின் மூல வேர். வெளி
உலகம் உள் உலகின் பிரதிபலிப்பே. யாருமே தனக்குள்ளே கிடைக்காததை வெளியில்
இருந்தும் பெற முடியாது என்பது ஆணித்தரமான உண்மை.

வெளியில்
ஆனந்தத்தைத் தேடுகிறோம். தோன்றும் தேவைகளையும், ஆசைகளையும் பூர்த்தி
செய்தால் அந்த ஆனந்தம் கிடைத்து விடும் என்று தோன்றுகிறது. சரி என்று
ஆசைகளைப் பூர்த்தி செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறோம். அந்த முயற்சியிலேயே
குறுக்கீடுகள் வந்தால் குமுறுகிறோம், அழுகிறோம், அங்கலாய்க்கிறோம்.
ஒருவழியாக அந்த தேவைகளையும், ஆசைகளை எப்படியோ பூர்த்தி செய்து விடுகிறோம்.
சரி இனியாவது ஆனந்தமாய் இருந்து விட வேண்டியது தானே. அப்படி எந்த மனிதனும்
ஆனந்தமாய் இருந்ததாய் இது வரை வரலாறு இல்லை. இனியும் அப்படி ஒரு வரலாறு
உருவாகப் போவதில்லை.

கிடைக்கின்ற ஆனந்தம் அலுத்துப் போகிறது.
அந்த மகிழ்ச்சிக்கு எப்போதும் அற்பாயுசு தான். மனம் அடுத்த ஆசைகளையும்,
தேவைகளையும் அடையாளம் காட்டுகிறது. இது கிடைத்தால் தான் ஆனந்தம் என்று
சொல்கிறது. மறுபடி அவற்றைப் பூர்த்தி செய்யப் போராட ஆரம்பிக்கிறோம். இந்த
சக்கர வட்டத்தைத் தாண்டி வெளியே வந்தால் தான் தெளிவு பிறக்குமே ஒழிய
அதிலேயே பிரயாணித்து இதற்கு ஒரு முடிவை எட்டி விடலாம் என்று எண்ணுவது
புத்திசாலித்தனமல்ல. வட்டப் பாதையில் முடிவு என்பது எங்கே இருக்கிறது?

திருவள்ளுவர் மிக அழகாகக் கூறுவார்.

“ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்”

(ஒரு பொழுதும் நிரம்பாத தன்மை உடைய ஆசையை ஒழித்தால், ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாத இன்பத்தைத் தரும்)


ஆசைகளின் இயல்பே பூர்த்தியாகாத நிலை தான் என்கிறார் திருவள்ளுவர். அதனால்
ஆசையையே ஒழித்தால் தான் நிலைத்த சந்தோஷம் என்கிறார். இதே கருத்தைத் தான்
கீதையிலும் பார்க்கிறோம்.


2) இன்ப துன்பங்களால் பாதிக்கப்படாதிருத்தல்:


இன்பமும் துன்பமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இந்த நாணயத்தை
நீங்கள் எடுத்தீர்களானால் இரண்டு பக்கங்களையும் நீங்கள் ஏற்றுக் கொண்டே ஆக
வேண்டும். ஏற்றுக் கொள்ள முடியா விட்டால் இந்த நாணயத்தை எடுத்துக்
கொள்வதையே தவிருங்கள்.

இந்த தத்துவத்தை கம்ப ராமாயணத்திலும்
ஓரிடத்தில் ராமன் மூலமாகக் கம்பனும் சொல்கிறான். 14 வருடங்கள் வன வாசம்
ராமன் செல்கின்ற போது மந்திரி சுமந்திரன் மிகுந்த வருத்தம் அடைகிறான்.
அவனைத் தேற்றி ராமன் சொல்கிறான்.

“இன்பம் வந்துறும் எனில் இனியது ஆயிடைத்
துன்பம் வந்துறும் எனில் துறக்கல் ஆகுமோ?”

(இன்பம் வந்த போது இனியதாக இருக்குமானால் துன்பம் வரும் போது மட்டும் அதைத் துறந்து விட முடியுமா?)

3) புலன்களை அடக்கி கட்டுப்பாட்டில் வைத்தல்:

ஐம்புலன்களும் நல்ல சேவகர்கள். ஆனால் மோசமான எஜமானர்கள். சேவகர்களாக அவை
இருக்க வேண்டும் என்றால் நீங்கள் அதற்கு எஜமானராக இருக்க வேண்டும். அப்படி
இருக்கா விட்டால் தானாக அவை எஜமானர்களாக மாறி உங்களை சேவகனாக ஆக்கி விடும்.
மோசமான ஒரு எஜமானிடம் சேவகனாக இருப்பதே பெரும்பாடு. இதில் பல
எஜமானர்களிடம் ஒரு சேவகன் அகப்பட்டுக் கொண்டால் அந்த பரிதாப நிலையை விளக்க
வேண்டியதில்லை.

புலன்களைப் பயன்படும் வேலையில் மட்டும்
பயன்படுத்தி பின் அடக்கி வைக்க வேண்டும். இல்லா விட்டால் அவை தான் தோன்றித்
தனமாக நடந்து கொண்டு தேவையில்லாத பல தகவல்களை நம்மிடம் சொல்லி, நம்மை நம்ப
வைத்து, அதன் விருப்பப்படி எல்லாம் செயல்பட வைத்து நம்மை சிக்கலில்
ஆழ்த்தி விடும். எனவே தான் ஸ்ரீகிருஷ்ணர் ஆமை தன் உறுப்புகளை எப்படி
தேவைப்படும் போது உள்ளடக்கிக் கொள்கிறதோ அப்படி நம் புலன்களை நம்
கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உபதேசிக்கிறார்.

இந்த ஆமை உதாரணத்தை திருவள்ளுவரும் சொல்கிறார்.

“ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து”

ஐம்புலன்களையும் ஆமை போல் அடக்கியாளும் வல்லமை ஒரு பிறவியில் பெற்றால் கூட அது ஏழு பிறவிகளிலும் அவனைக் காக்கும் என்கிறார் அவர்.


இவ்வாறெல்லாம் செய்து பரம்பொருளை அடைக்கலம் அடைந்தால் அந்த அறிவு
சிரஞ்சீவியாய் சாசுவதமாக ஒருவனிடம் நிலைத்து விடுகிறது என்கிறது கீதை. பின்
எக்காலத்திலும் ஒருவன் பின் நோக்கவோ வருத்தப்படவோ அவசியம் இல்லாமல்
போகிறது.
logu
logu

Posts : 69
Join date : 01/08/2011

Back to top Go down

கீதை காட்டும் பாதை Empty Re: கீதை காட்டும் பாதை

Post by logu August 5th 2011, 20:16

ஆசையிலிருந்து அழிவு வரை ...


நிலைத்த அறிவுடையவனைப் பற்றி விவரித்துக் கொண்டு வருகையில் ஆசையில்
ஆரம்பித்த பயணம் அழிவு வரை எப்படிக் கொண்டு வந்து விடுகிறது என்பதை
ஸ்ரீகிருஷ்ணர் மிக அழகாக விளக்குகிறார்.

”புலன்களுக்கான
சாதனங்களையே நினைத்துக் கொண்டு இருப்பவனுக்கு அவற்றில் பற்றுதல்
எழுகின்றது; பற்றுதலில் இருந்து ஆசை உண்டாகின்றது; ஆசையிலிருந்து கோபம்
பிறக்கிறது. கோபத்தால் மன மயக்கம் ஏற்படுகிறது. மனமயக்கத்தால் மறதி
ஏற்படுகிறது. மறதியினால் புத்தி பாழாகிறது. புத்தி பாழானால் மனிதன் அடியோடு
அழிகிறான்”

எல்லா ஆரம்பங்களும் எண்ணங்களில் இருந்தே
ஆரம்பிக்கின்றன. உயர்விற்கும் அழிவிற்கும் உற்பத்தி ஸ்தானங்கள் எண்ணங்களே.
புலன்கள் வழியே எண்ணங்களை ஓட விடும் போது அதற்கு அப்போது பெரியதொரு சக்தி
இருப்பது போல் நாம் உணர்வதில்லை. எண்ணங்கள் அப்படியே புலன் வழிப்
பொருள்களிலேயே தங்குமானால் அவற்றில் ஒரு கவர்ச்சி ஏற்படுவது இயற்கை. அவை
நமக்கு மிகவும் பிடித்துப் போகிறது. உடனே அவற்றை அடைய ஆசை பிறக்கிறது. இந்த
தருணத்தில் ஆசை மிகவும் பலம் பெற்று விடுகிறது.

விருப்பம்
ஆசையான பிறகு அனுபவிக்க முயல்கையில் அதற்கு ஏதாவது இடைஞ்சல்கள் வந்தால்
கோபம் பிறக்கிறது. கோபம் வந்து விட்டாலோ மனிதன் சிந்திக்கும் திறனை
இழக்கிறான், தன்னை மறக்கிறான், மன மயக்கம் அடைகிறான். தான் யார்
என்பதையும், தனக்கு நல்லது கெட்டது எது என்பதையும் மறக்கிறான். இந்த
மறதியால் புத்தி பாழாகிறது. நன்மை, தீமையை சுட்டிக்காட்டுவதற்கும், வரும்
அபாயத்தை எச்சரிப்பதற்கும் மனிதனிடம் ஏற்படுத்தப்பட்ட புத்தி பாழானால் பின்
மனிதன் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக அழிவை நோக்கி சரிகிறான்.


எனவே வெறும் எண்ணம் தானே என்று அலட்சியமாய் இருப்பது அபாயகரமானது. எண்ணம்
எங்கே சஞ்சரிக்கிறது என்பதில் மிகுந்த கவனம் தேவை. ஏனென்றால் குறிப்பிட்ட
ஒரு விஷயத்தில் எண்ணங்கள் அதிக நேரம் தங்கத் தங்க அவை பலப்பட
ஆரம்பிக்கின்றன. எண்ணங்களில் நமக்குக் கட்டுப்பாடு இல்லையானால் அவை
செயல்களாக விளைகையில் நாம் அதன் விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும்.


மலை மீதிருந்து உருட்டி விடப்பட்ட கல் எப்படி வேகமாகப் பயணித்து கீழே
வந்து சேர்கிறதோ அப்படியே தான் புலன்களின் வழியில் சிந்தனைகளை ஓட
விடுபவனும் கடைசியில் அழிவையே சந்திக்கிறான். கல்லை மலையில் இருந்து தள்ளி
விட முனையும் முன் உங்களை நீங்கள் தடுத்துக் கொள்ளலாம். தள்ளி விட்ட பின்
கல்லைத் தடுக்க முயற்சிப்பது வீண். கல் தன் பயணத்தை முடித்தே நிற்கும்.
எனவே கடுமையான விளைவுகளை விரும்பாதவர்கள் எல்லாவற்றையும் எண்ண நிலையிலேயே
மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனம். அங்கு வரை தான் அதன் மீது கட்டுப்பாடு
உங்கள் கையில் இருக்கிறது.

புத்தரும் தம்மபதத்தில் ஆசைகளே
மனிதனின் துன்பங்களிற்குக் காரணம் என்று சொல்கிறார். ஆசைகள் இயல்பாகவே
பூர்த்தியடையாத, திருப்தியடையாத தன்மையைக் கொண்டவை என்பதால் ஆசைகளைப்
பூர்த்தி செய்ய முயல்பவன் முடிவில் அது முடியாமல் துக்கத்தையே
சந்திக்கிறான் என்று சொல்கிறார். மேலும் வீட்டில் விளக்குகள் எரியும் போது
திருடர்கள் உள்ளே நுழையத் தயங்குவார்கள் என்றும், விளக்குகள் இல்லாத
இருட்டு வேளையில் தான் உள்ளே நுழையத் துணிகிறார்கள் என்றும் உதாரணம்
கூறுகிறார். இங்கு விழிப்புணர்வு தான் விளக்காக உதாரணம்
காட்டப்பட்டிருக்கிறது. புலன்வழி பிறக்கும் ஆசைகள் இங்கு திருடர்களாக
சித்திரிக்கப்படுகின்றன. வீட்டு எஜமானன் விழித்திருக்கையில் திருடர்கள்
நுழைவதில்லை, அவன் விழிப்புணர்வுடன் இல்லை என்கிற போது தான் திருடர்கள்
தங்கள் கைவரிசையைக் காட்டுகின்றனர்.

விழிப்புணர்வு என்பது
நிலைத்த அறிவுடையவனுக்கு தான் தொடர்ச்சியாக இருக்க முடியும்.
அப்படிப்பட்டவன் புலன்வழியாக எண்ணங்கள் பயணிக்க ஆரம்பிக்கும் முதல்
கணத்திலேயே அதை உணர்ந்து அந்த எண்ணங்கள் பலப்படும் முன்னர் அவற்றை அழித்து
விடுகின்றான். களைகளை முளை விடுகையிலேயே பிடுங்குவது சுலபம். அவை
வேர்விட்டு பலமடைந்த பின்னர் பிடுங்குவது மிகவும் கஷ்டம். அது போலத் தான்
எண்ணங்கள் தோன்றுகையிலேயே அவற்றின் போக்கறிந்து அழித்து விடுவது சக்தி
விரையத்தையும் நேர விரையத்தையும் தவிர்க்கிறது.

ஸ்ரீகிருஷ்ணர்
மேலும் சொல்கிறார். “புலன்கள் அலைந்து திரிகையில் மனமும் பின் தொடர்ந்து
சென்றால் புயல்காற்று படகை அடித்துச் செல்வது போல அவனது அறிவை மனம்
அடித்துச் சென்று விடுகிறது.” இது மிக அழகான உதாரணம். புயல்காற்றில்
சிக்கிய படகு எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்பட்டு படாதபாடு படுகிறதோ அது போல
ஆசைவழி சென்ற பகுத்தறிவுள்ள மனிதனும் மனதை அடக்கியாள முடியாமல் மிகவும்
கஷ்டப்படுகிறான்.


கிட்டத்தட்ட இதே உதாரணத்தை தாமஸ்
ஏ.கெம்பிஸ் என்ற அறிஞரும் கூறுகின்றார். “சுக்கானில்லாத கப்பலை அலைகள்
அங்குமிங்கும் இழுத்துச் செல்வதைப் போல தனது உறுதியான தீர்மானத்தைக்
கைவிட்ட மனிதனை ஆசைகள் பல வழிகளிலும் கவர்ந்து செல்கின்றன”

இந்த
படகு, கப்பல் உதாரணங்கள் மிகவும் பொருள் பொதிந்தவை. நம்மை ஓரிடத்திலிருந்து
இன்னொரு இடத்திற்கு அழைத்துச் செல்ல உதவுபவை படகும், கப்பலும். அந்தப்
பயணத்தை நம் வாழ்க்கைப் பயணம் என்று எடுத்துக் கொள்வோம். ஒரு இலக்கை
நோக்கிப் பயணிக்கும் அந்த வாழ்க்கைப் பயணத்திற்கு நமக்குக் குறிப்பிட்ட
காலமே கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதற்குள் அந்த இலக்கை நாம் அடைந்தாக
வேண்டும். அப்படி இருக்கையில் ஆசைகளை நம்மை ஆட்சி செய்ய விட்டால் நம்
பயணத்தின் வழி மாறி அங்குமிங்கும் நாம் அலைக்கழிய நேரிடும். ‘ஆசையே அலை
போலே, நாமெலாம் அதன் மேலே, ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே’ என்று கவிஞர்
பாடியது போல நம் வாழ்க்கை நம் ஆரம்ப எண்ணப்படி இலக்கு நோக்கி செல்லாமல்
சம்பந்தமில்லாத வழிகளில் அடித்து செல்லப்பட்டு விடும்.
மீதமுள்ள
வாழ்க்கை முழுவதும் பாடுபட்டு முயன்றால் கூட தடம் புரள ஆரம்பித்த அந்த
இடத்திற்கு வந்து சேர்வது கூட சில சமயங்களில் முடியாத காரியமாகி விடும்.


சுவாமி சச்சிதானந்தா இதற்கு வேறொரு அருமையான உதாரணத்தைக் கூறுகிறார்.
“மிக வேகமாகத் தாவிச் செல்லும் ஒரு குதிரையின் சேணத்தின் மேல் கட்டப்பட்டு
உங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, எப்படியோ குதிரை உங்கள் மேல்
அனுதாபப்பட்டு ஓடுவதை நிறுத்தும் என நீங்கள் பயணம் செய்வதாக உங்கள்
நிலையைக் கற்பனை செய்து பாருங்கள்.
இதுவா ஆனந்த அனுபவம். அது நமது
மனதின் மேல் நமக்குக் கட்டுப்பாடு இல்லாத போது உள்ள நிலை. அதே சமயம்
எப்போது வேண்டுமோ அப்போது குதிரையை நிறுத்தி, அதனைக் கட்டுப்படுத்தி அதன்
முதுகின் மேல் சவாரி செய்பவர் யாரோ அவரே உண்மையில் குதிரைச் சவாரியை
ஆனந்தமாக அனுபவிக்க முடியும். உலகைக் கையாள்வது எப்படி என்று நீங்கள்
தெரிந்து கொள்ளும் போது உலக வாழ்வை இனிமையாக அனுபவிப்பீர்கள். உங்கள்
நாவின் மேலும், கண்களின் மேலும் கட்டுப்பாட்டை வைத்து ஆளத் தெரிந்து
கொண்டால் வாழ்க்கையை உண்மையிலேயே ஆனந்தமாக அனுபவிப்பீர்கள்”.


ஆசைகள் வழி செல்கின்ற பயணத்தில் என்றுமே கட்டுப்பாடு நம் வசம் இருக்க
முடியாது. இதோ சிறிது தூரம் தான், இதோ இது மாத்திரம் தான் என்று மனம்
ஆசைகள் வாய்பட்டு தன்னையே ஏமாற்றிக் கொண்டு தொடர்ந்து பயணிக்கும் போது
ஸ்ரீகிருஷ்ணர் சொல்வது போல முடிவில் புயலில் சிக்கிய படகாக
அலைக்கழிக்கப்படுகிறது. இந்த அலைக்கழிப்பில் இருந்து தப்பிக்க ஆசையை உதறி
விடுவது தான் ஒரே வழி. புலன்வழிச் சிந்தனைகள் ஆசை காட்டும் போது, தூண்டிலை
வீசும் போது, சிக்கிக் கொள்ளாமல் அலட்சியம் செய்வதன் மூலமாகவே ஒருவன்
துக்கத்திலிருந்தும், அழிவிலிருந்தும் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும்.
எனவே தான் புலன்களைக் கட்டுப்படுத்தி ஆசைகளையும் தவிர்த்தவன் அறிவே
நிலையானது என்று ஸ்ரீகிருஷ்ணர் உறுதியாகக் கூறுகிறார்.

சில
சமயங்களில் ஒரு ஆசையே ஒருவனது துக்கத்திற்கும், அழிவிற்கும் மூலகாரணமாகி
விடுவதுண்டு. தங்கம் போல் தகதகவென்று மின்னிய மாயப் பொன்மானைக் கண்டு
ஆசைப்பட்ட சீதை அந்த ஒரு ஆசையின் காரணமாகவே தன் பிற்கால வாழ்வு முழுவதும்
துக்கத்தில் ஆழ நேரிட்டது. சீதையின் மேல் வைத்த ஒரு ஆசை ராவணனின் எல்லா
வலிமைகளையும் போக்கி அவன் அழியக் காரணமாகி விட்டது.

மேலும்
ஆசைகளை எல்லாம் பூர்த்தி செய்து அனுபவித்து திருப்தி அடைந்து, இனி போதும்
என்று நிறைவடைவது நடக்காத காரியம். இந்த உலக இன்பங்களை பல்லாண்டுகள்
சுகித்து, மூப்படைந்தவுடன் ஒரு மகனுடைய இளமையையும் இரவல் வாங்கி மேலும் பல
காலம் சுகங்களை அனுபவித்தும் நிறைவு பெறாமல், இந்த ஆசைப் பயணத்திற்கு எல்லை
இல்லை என்பதை இறுதியில் உணர்ந்தான் பாண்டவர்களின் மூதாதையருள் ஒருவனான
யயாதி.

எனவே தான் நம் முன்னோர்கள் உலகையே வென்றவனை விட, ஆசைகளை
வென்றவனை உயர்வாக நினைத்தார்கள். உலகை வெல்லத் தேவைப்படும் சக்தியை விட
அதிகமாய் ஆசைகளை வெல்ல வலிமை வேண்டும் என்று அவர்கள் அனுபவத்தில்
உணர்ந்திருந்தார்கள். அலெக்சாண்டர் உலகையே வெல்லப் புறப்பட்டு இந்த தேசத்து
எல்லைக்கு வந்த போது அங்கிருந்த துறவிகளிடம் காணப்பட்ட தேஜசையும்,
அமைதியையும், சாந்தியையும் கண்டு பிரமித்தான் என்று சொல்லப்படுகிறது.
கிரேக்கத்தில் மாசிடோனியா என்ற சிறு நாட்டின் மன்னனான அவன் அங்கிருந்து
இமயம் வரை கடந்து வந்த இடங்களையெல்லாம் வென்ற மாவீரன். அவன் வாழ்நாள்
நீடித்திருந்தால் உலகையே வென்றிருப்பான் என்று பல வரலாற்றாசிரியர்கள்
கருத்து தெரிவிக்கிறார்கள். அத்தனை நாடுகளை வென்று குவித்தும் அவனால் பெற
முடியாத நிறைவான அமைதியை, ஆசைகளை வென்றிருந்த அந்த துறவிகளிடம் கண்ட போது
அரிஸ்டாடிலின் மாணவனான அவனுக்கு உண்மையான வெற்றி எது என்று
புரிந்திருக்கும். இந்த உண்மையான வெற்றியை ஸ்ரீகிருஷ்ணர் வர்ணிக்கும்
நிலைத்த அறிவுடையவனாலேயே பெற முடியும்.
logu
logu

Posts : 69
Join date : 01/08/2011

Back to top Go down

கீதை காட்டும் பாதை Empty Re: கீதை காட்டும் பாதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum